கடலரிப்பு தடுப்புசுவர், தூண்டில் வளைவுகள் கேட்டு போராடும் மக்கள் அலை சீற்றத்தால் அரிக்கப்படும் கடற்கரையோர மீனவ கிராமங்கள்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 48 கடற்கரை  கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் விசைபடகு மற்றும்  கட்டுமரம், பைபர் படகுகளில் கடலுக்கு சென்று  மீன்பிடித்து வருகின்றனர்.  கன்னியாகுமரி முதல் பழைய உச்சகடை வரை சுமார் 72 கிலோ மீட்டர் நீளம் உள்ள  மேற்குகடற்கரை சாலை இந்த 48 மீனவ கிராமங்களையும் இணைக்கிறது.  குமரி மாவட்ட  பகுதிகளில் எப்போதும்  கடலலைகள் ஆக்ரோசமாக இருக்கும்.  இதில் மீனவர்களுக்கு  பெரும் சவாலாக இருப்பது தென்மேற்கு பருவகாற்று வீசும் ஜூன், ஜூலை  மாதங்கள்தான். அப்போது கடல் கொந்தளிப்பாகவே காணப்படும். தேங்காய்ப்பட்டணத்திற்கும் இனயத்திற்கும் இடையே உள்ள  பள்ளிமுக்கு முதல்  அரையன்தோப்பு வரை அடிக்கடி கடல் அலை ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால்  சுமார் 1000 மீட்டர் நீளமுள்ள சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி கடல் தண்ணீர் ஊருக்குள் வருவதால் அரையன்தோப்பு பகுதியில் வசித்து வந்த பல குடும்பங்கள் வேறு இடங்களுக்கு சென்று  விட்டனர். இதுபோல் மணக்குடிக்கும் சொத்தவிளைக்கும் இடையே சுமார்  175 மீட்டர் சாலையை கடலரித்து சென்றுள்ளது.  இதனால் அந்த வழியாக  செல்பவர்கள் சுமார் 9 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை இருந்து  வருகிறது. இதுபோல் மண்டைக்காடு புதூரில் கடல் அலை அதிகமாக எழும்போது கரையில்  நிறுத்தப்பட்டுள்ள படகுகள் சேதமாகி வருகிறது. மண்டைக்காடு புதூர், கடியப்பட்டணம், குறும்பனை.  அழிக்கால்,  பிள்ளைத்தோப்பு உள்ளிட்ட இடங்களில் வீடுகள் அமைந்துள்ள இடம் வரை தண்ணீர் வந்து செல்கிறது. குறிப்பாக அழிக்கால் பகுதியில் ஆண்டுக்கு நான்கு ஐந்து முறை கடல் அலை ஊருக்குள் புகுந்துவிடுகிறது. வள்ளவிளைக்கும் இரவிபுத்தன்துறைக்கும் இடையே சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பில் இருந்து கடற்கரை கிராமங்களை   பாதுகாக்க கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும், தொழில் வாய்ப்புக்காக   தூண்டில்வளைவு அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை   வைத்து மீனவர்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசும்,   பொதுப்பணித்துறையும் கடலில் காயம் கரைப்பது போன்று ஒரு சில இடங்களில்  ஒட்டுப்போடும் பணியைத்தான் நடத்திக்கொண்டு இருக்கின்றன.குமரி  மாவட்டத்தில் வங்க கடல் 10 கிலோ மீட்டர் தூரமும், அரபிக்கடல் 60 கிலோ  மீட்டர் தூரமும் உள்ளது. மேற்கு மாவட்ட பகுதியில் அலையின்  தாக்கம் வருடம் முழுவதும் அதிகமாகவே இருக்கிறது.  இதனால் கடல் அரிப்பு  தடுப்பு சுவர்கள் சேதமாகி வருகிறது. எனவே தொழில்நுட்பத்துடன், மீனவர்களின் ஆலோசனையின்படி மீனவ கிராமங்களை ஒருங்கிணைத்து தூண்டில் வளைவு, தடுப்புசுவர்கள் அமைக்கும் பட்சத்தில் மட்டுமே மீனவ கிராமங்களை காப்பாற்ற முடியும் என மீனவர்கள், மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர்  கூறியதாவது: கன்னியாகுமரி முதல் பழைய உச்சக்கடைவரை 72 கிலோ மீட்டர்  மேற்குகடற்கரை சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.   மேலும் கடற்கரை பகுதியில் உள்ள பஞ்சாயத்துக்கள் குடிநீர்  குழாய் பதிப்பதற்கு முறையான அனுமதிபெறுவது கிடையாது.  அவர்கள் சாலையை  கண்டபடி தோண்டிபோட்டு செல்கின்றனர். இதனால் மழை பெய்யும்போதும், கடல்   சீற்றத்தாலும் சாலைகள் பழுதாகிவிடுகிறது என்றனர். இது குறித்து பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு கோட்ட அதிகாரி  ஒருவர் கூறியதாவது: இந்திய பெருங்கடலில் தென்மேற்கு பருவ காலங்களில் அவ்வப்போது ஏற்படும் பெரும் கடலலைகளின் தாக்குதலில் இருந்து மீனவ மக்களின் வாழ்வாதார   உடமைகளை பாதுகாக்க கடலரிப்பு தடுப்பு சுவர்கள் அமைக்கப்படுகிறது.   சுனாமிக்கு பிறகு ஐஐடி மாஸ்டர் பிளான் அடிப்படையில் 31   இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கவும், 20   இடங்களில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் அமைக்கவும் அரசுக்கு நீண்ட கால  தீர்வு அடிப்படையில் கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை உள்ளதால் அவ்வப்போது சில கடற்கரை பாதுகாப்பு பணிகள் மட்டுமே செய்யப்பட்டு வருகின்றன. பொதுப்பணித்துறையால் கற்களால் கட்டப்படும்  கடலரிப்பு தடுப்பு சுவர்களை பராமரிக்க எவ்வித நிதி ஒதுக்கீடும் கிடைக்க   பெறாதால் கடலலைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களால் பெரிய கற்கள் இடம்   பெயர்ந்து விடுகிறது.இதனால் சில வருடங்களில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் முற்றிலும்  சேதமடைகிறது என்றார்.  …

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி