கடமலை பகுதியில் நச்சுப் புகையை வெளியேற்றி செல்லும் தனியார் பஸ்கள்

வருசநாடு, ஜூன் 14: கடமலை – மயிலை பகுதியில் சில தனியார் பேருந்துகள் சரிவர பராமரிக்கப்படாமல் நச்சுப் புகையை வெளியேற்றி செல்கின்றன. இதனை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாட்டுக்கு தேனி, பெரியகுளம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 30க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அரசு மற்றும் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட மாத இடைவெளியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்குட்படுத்தி தகுதி சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் கடமலை-மயிலை பகுதியில் சரிவர பராமரிக்கப்படாத சில தனியார் பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் பேருந்துகள் சாலையில் கரும்புகையை வெளியேற்றியபடி செல்கின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

மேலும் சுற்றுப்புற சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக இந்தப் பகுதி மக்கள் கூறுகையில் ‘‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் சில கரும்புகையை வெளியேற்றியபடி செல்கின்றன. சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்