கடன் நீக்கும் லட்சுமி நரசிம்மர்

புதுச்சேரியில் முதன்முறையாக முத்தியால் பேட்டையில் லட்சுமி நரசிம்மருக்கு தனிக்கோயில் அமைக்கப்படுகிறது. 3500சதுர அடியில் பிரமாண்டமாக அமைய உள்ள இப்பணிக்கான ஏற்பாடுகளை லட்சுமி ஹயக்ரீவர் திருக்கோயில் கமிட்டி செய்துவருகிறது. தமிழகத்தில், சென்னை அருகில் உள்ள செட்டிபுண்ணியம், கடலூர் அருகில் உள்ள திருவந்திபுரம் என பல இடங்களில் லட்சுமி ஹயக்ரீவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதேபோல லட்சுமி ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்ட கோயில் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோயில்.இக்கோயில் தோன்றிய வரலாறு மிக சுவாரஸ்யமானது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு முத்தியால்பேட்டை கடற்கரைக்கு மேற்கில் ஓர் அழகிய குளத்துடன் கிராமப் பகுதி இருந்திருக்கிறது. குளத்தின் கரையில், பறவைகள் ரீங்கரிக்கும் ஒரு பசுமையான அரசமரம் இருந்திருக்கிறது. அரசமரத்தின் அடியில், இரண்டு நாகர் சிலைகளை அமைத்து அப்பகுதி மக்கள் வணங்கி வந்தனர். இதனிடையே, முத்தியால்பேட்டை புதுச்சேரி நகரின் மையப்பகுதியாக விளங்க தொடங்கியதால், இப்பகுதி குடியிருப்பு பகுதியாக மாறி, ராமகிருஷ்ணா நகர் என பெயர் பெற்றது. இந்த நிலையில், 1971 ஆம் ஆண்டில், புதுச்சேரியில் தலைமைச் செயலராக இருந்த லட்சுமி ஹயக்ரீவரின் பக்தரான ஆர்.எஸ்.சாரி என்பவர், தன் இஷ்ட தெய்வத்திற்கு கோயில் அமைக்க வேண்டும் என விரும்பினார். அப்போது அவருக்கு ராமகிருஷ்ணா நகரில், நாகர் வழிபாடு செய்யப்படும் பகுதியில் ஒரு இடம் இருப்பது தெரியவந்தது. அந்த இடம் அவருக்கு பிடித்துப்போனதால், அங்கே லட்சுமி ஹயக்ரீவர் கோயிலை கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் 1983, 1995, 2012 ஆகிய ஆண்டு களில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்வாறு லட்சுமி ஹயக்ரீவர் கோயில் அங்கு பிரபலமாகி பக்தர்களுக்கு வளம் அருளியது. இதனை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டில், மூலவருக்கு மூன்றுநிலை ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, ரூ. 1 கோடி செலவில் மூலஸ்தானம், கொடிமரம், முன்மண்டபம் ஆகியவற்றுக்கு தங்கமுலாம் பூசப்பட்டது. தங்கமுலாம் பூசப்பட்ட மூலஸ்தானத்தில், மூலவர் வைகுண்டத்தில் சேவை சாதிப்பதை போன்ற காட்சி பக்தர்களை பரவசப்படுத்திவருகிறது. மூலஸ்தானத்தின் முன்மண்டபத்தில் மிகப்புராதனமான ஹயக்ரீவ கல்பம் என்னும் நூலில் கூறப்பட்டது போல, ஹயக்ரீவரின் வடிவங்கள் சிமெண்டில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும், பஞ்சலோக விக்ரகங்களாக தீர்த்த ஹயக்ரீவர், லட்சுமி வராகர், லட்சுமி நரசிம்மர். ராமலட்சுமண சீதை அனுமன், புதுவை கடலில் கண்டெடுக்கப்பட்ட வேணுகோபாலன், சந்தான கிருஷ்ணன், வாமன பெருமாள், தன்வந்திரி பகவான், ஆண்டாள். விஷ்வக்சேனர், சக்கரத்தாழ்வார், அமிர்தகலச கருடன், பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார். உள்ளிட்டோர் உற்சவ ரூபமாக எழுந்தருளியுள்ளனர். கோயிலின் இரண்டாம் தளத்தில் அஹோபிலம் உள்ள நவநரசிம்ம மூர்த்திகள் மற்றும் பானக நரசிம்மர் உற்சவ மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர். இத்தகைய சிறப்புகள் நிறைந்த இந்த கோயிலின், வடக்கு புறத்தில் மிக பிரம்மாண்டமான வடிவில் லட்சுமி நரசிம்மருக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள சிங்கிரிகோயில், பூவரசங்குப்பம், பரிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் லட்சுமி நரசிம்மருக்கு தனிக்கோயில்கள் உள்ளன. ஆனால் புதுச்சேரியில் அத்தகைய கோயில் இல்லை. இந்த குறையை போக்கும் வகையில் இந்த கோயில் விரைவில் பக்தர்களுக்கு ஆசி வழங்கப்போகிறது. முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலின் அருகிலேயே அமைய உள்ள இக்கோயிலை சுமார் 3500 சதுரஅடியில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம், அர்த்த மண்டபம், கொடிமரம் , மூலஸ்தானம் , பிரகாரம் , நூதன மண்டபம் உள்ளிட்டவற்றோடு ரூ .3 கோடிகளுக்கு மேலான திட்ட மதிப்பீட்டில் இக்கோயிலை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுவாமி தேசிகன், ஹயக்ரீவரின் லாலாம்ருதத்தை ஏற்றவுடன் அருளிய முதல் ஸ்தோத்ரம் ஹயக்ரீவ ஸ்தோத்ரம் ஆகும். இது நரசிம்ம ஸ்தோத்ரமாகவும், அமையும் என நமது முன்னோர்கள் குறிப்பிடுவார்கள். அந்த வகையில் லட்சுமி நரசிம்மர், ஹயக்ரீவரின் அருகிலேயே அமைய உள்ளார். அஹோபிலத்தில் எழுந்தருளியிருக்கும் நவ நரசிம்மர்களான ஜ்வாலா, அஹோபில, மாலோல, க்ரோட, காரஞ்ச, பார்கவ, யோகானந்த, சத்ரவட, பாவன ஆகிய 9 நரசிம்மர்களுடன் ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள பானக நரசிம்மருக்கும், இக்கோயிலில் சந்நதிகள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இது பக்தர்களின் எண்ணங்களை மேலும் சிறந்ததாக்கி வாழ்வில் தழைத்தோங்க அருள்புரியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் பிறவியெனும் கடன் நீக்கிடவும், வாங்கிய கடன் நீக்கிடவும், திரும்பப் பெறவேண்டின் பெற்றிடவும், செவ்வாய் விலகி வருவாய் சேரவும், பூமியின் ரோகம் நீக்கி ஆரோக்கியம் பெருகவும், ஆளரியின் அருந்தொண்டில் பங்குபெற அழைக்கின்றோம். (சம்பத்குமார்-9994460420) லட்சுமி ஹயக்ரீவரை பூஜித்து மனமுருக வழிபட்டால் மாணவ, மாணவியரின் மனதில் தெளிவு பிறக்கும். தீய சிந்தனைகள் அணுகாது. கிரகிப்புத்திறனும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். வயதுக்கு சம்பந்தமில்லாத தவறான எண்ணங்கள் நீங்கும். வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒழுக்கம், தன்னடக்கம், பண்பு, வாக்குவன்மை, விவேகம், பெருந்தன்மை உள்ளிட்ட நற்குணங்கள் வாய்க்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வழிபட்டால் பிறவிபெறும்….

Related posts

சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?

துலாம் ராசி குழந்தை

ஜாதகத்தில் விவாகரத்தை கண்டுபிடிக்க முடியுமா?