கடந்த 4 ஆண்டுகளில் செய்த பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும்: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த இடங்கள் மீட்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். சென்னை நகரத்தின் முக்கியமான வெள்ளநீர் வடிகாலாக பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ளது. வேளச்சேரி முதல் மேடவாக்கம் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பரவி உள்ளது. பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதி கடந்த 1960ம் ஆண்டுகளில் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்தது. ஆனால், நகரமயமாதல் காரணமாகவும், தொழில்மையம், கல்வி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் சதுப்பு நிலப்பகுதி தற்போது 700 ஹெக்டேர் பரப்பளவிற்கு சுருங்கியுள்ளது. தற்போதைய ஆக்கிரமிப்பு காரணமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையொட்டியுள்ள நீர் ஆதாரம் மற்றும் தாவரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை 1,085 குடியிருப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சதுப்பு நிலப்பகுதியில் 176 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நிலநீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தை இனங்கள், 5 வகையா ஒட்டு மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடமாக உள்ளது. கடந்த 2020-21ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 41,849 பறவைகள் சதுப்பு நிலப்பகுதியில் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் வகையில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழ்நாடு சதுப்பு நில இயக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் சதுப்பு நிலத்தை மீட்டெடுக்கும் பணியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், மற்றும் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு சதுப்பு நில இயக்கம் திட்டத்தினை அறிவித்தார். அதன் அடிப்படையில் இன்று (நேற்று) பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை ஆய்வு மேற்கொள்ள வந்துள்ளோம். சதுப்பு நில பகுதிக்கு அருகில் உள்ள குப்பை கிடங்கை அகற்றி, சீரமைக்கும் பணி முதல்கட்டமாக மேற்கொள்ளப்படும். 7000 ஹெக்டேர் நிலம் உள்ள பள்ளிக்கரணை தற்போது 640 ஹெக்டேராக உள்ளது. இங்குள்ள குப்பை கிடங்கு அகற்றப்பட்டு வனமாக மாற்ற திட்டம் மேற்கொண்டு வருகிறோம்.முதல்கட்டமாக குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டுமொத்தமாக மீட்டெடுக்க வேண்டும். இந்த சதுப்பு நிலத்தில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் பறவைகள் இங்கு வந்து செல்லும், இதன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் மீட்டெடுக்கும் பணி துவங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பராமரிப்பு சரியாக இல்லை. சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த மண் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாகவும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதுவும், கடந்த 4 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்த இடங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்து 6 இடங்களில் மழைநீர் வருகிறது. இந்த பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் வந்து கலக்கிறது. எனவே, அந்த பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்