கடந்த 4 ஆண்டுகளில் கட்டுமான தொழிலுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

தமிழகத்தில் மணல் குவாரிகள் தனியார் மூலம் நடத்தப்பட்டு வந்தது. இதன் மூலம், அவர்கள் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வந்தனர். மேலும், அவர்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி குவாரிகளில் மணல் அள்ளியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கடந்த 2003 முதல் மாநிலம் முழுவதும் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தியது. ஆரம்பத்தில் 48 மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்தது. இதனால், மணல் குவாரிகளின் எண்ணிக்கையை படிப்படியாக தமிழக அரசு அதிகரித்தது. குறிப்பாக, கடந்த 2007ம் ஆண்டு 117 மணல் குவாரியாக அதிகரிக்கப்பட்டது. அப்போது, மணல் தாராளமாக கிடைத்தது. இதனால், ஒரு நாளைக்கு மணல் விற்பனை மூலம் ரூ.700 கோடி வருமானம் வந்தது. இப்போது மணல் குவாரிகள் இல்லாததால் ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 113 குவாரிகள் இருந்தன. ஜெயலலிதா இருந்தபோது ஒரு லோடு (7 யூனிட்) மணல் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மணல் குவாரிகளில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி அதிகளவில் மணல் அள்ளியதாக புகார் எழுந்தது. இதனால், உயர் நீதிமன்றம் கண்டனத்துக்கு தமிழக அரசு ஆளானது. தொடர்ந்து சுற்றுச்சூழல் விதிகளும் கடுமையாக்கப்பட்டன. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு மணல் குவாரிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. ஆனாலும், ஒரு சில குவாரிகளுக்கு மட்டுமே மணல் அள்ள அனுமதி தருவதாகவும், மற்ற குவாரிகளுக்கு தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மணல் விற்பனையை வரன்முறை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ல் ஆன்லைன் மூலம் மணல் விற்பனை திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆனால், மணல் குவாரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக, கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், கட்டுமான தொழிலை நம்பியுள்ள 90 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் லோடு முதல் மாநிலம் முழுவதும் 9 ஆயிரம் லோடு மணல் தேவைப்படுகிறது. ஆனால், பாதியளவு கூட மணல் கிடைக்கவில்லை. தற்சமயம் ஒருசில மணல் குவாரிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஆன்லைன் புக்கிங் முறையில் ஒரு வருடத்திற்கு ஒரு லாரிக்கு 3 லோடுகள் மட்டுமே மணல் கிடைக்கின்றன. இதனால், மணல் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. தற்போது, 3 யூனிட் மணல் ரூ.60 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் விலையும் தாறுமாறாக இருப்பதால், கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கிவிட்டது. கடந்த 4 ஆண்டுகளில் கட்டுமான தொழிலுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி ஆற்று மணலுக்கு மாற்றாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணல் விலையையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வேறுவழியின்றி அதிக விலை கொடுத்து எம்சாண்ட் வாங்க வேண்டிய நிலைக்கு கட்டுமான நிறுவனங்கள் தள்ளப்பட்டன. மணல் தட்டுப்பாட்டை ஒரு சிலர் பயன்படுத்திக்கொண்டு தரமற்ற எம்சாண்டை விற்பனை செய்கின்றனர். இந்த எம்சாண்டை கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவதால் கட்டிடங்கள் இடிந்து விழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட பலரிடம் மனு அளித்தனர். அவர்களை 10 முறைக்கு மேல் சந்தித்து மணல் குவாரிகளை திறக்க கோரிக்கை வைத்த நிலையில் அவர்கள் திறக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், உள்ளூர் ஆளும் கட்சி நிர்வாகிகள் கள்ளத்தனமாக மணல் அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் அவர்கள் சம்பாதித்துள்ளனர். அவர்களுக்கு அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். மணல் திருட்டை ஊக்குவிக்கத்தான் குவாரிகளை திறக்க மறுக்க காரணமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், எம்சாண்ட் குவாரிகள் பெரும்பாலும் கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் தான் அமைந்துள்ளது. இந்த குவாரிகளில் உரிமையாளர்கள் ஆளும் தரப்புக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர். அவர்களின் குவாரிகளில் மணல் பெற வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று மணல் குவாரிகளை திறப்பதில் அக்கறை காட்டாமல் உள்ளனர். இப்போது, அரசு கட்டுமான பணிகள் அனைத்துக்கும் எம்சாண்ட் தான் பயன்படுத்துகின்றனர். ஆற்றுமணலை விட எம்சாண்ட் மணல் விலை அதிகம். ஆனால், அரசு, ஆளும் தரப்புக்கு வேண்டப்பட்டவர்களின் எம்சாண்ட் குவாரிகளில் மணல் பெற வேண்டும். இதன் மூலம் அவர்கள் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக இப்படி ஆற்று மணல் குவாரிகளை திறக்காமல் வைத்துள்ளனர். இதனால், பொதுமக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலரின் சுயநலத்துக்காக கட்டுமான தொழில் முழுவதும் முடங்கி உள்ளது. நாட்டில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.  குறிப்பாக, ஆந்திராவில் 80 குவாரிகளும், தெலங்கானாவில் 115 குவாரிகளும் செயல்பட்டு வருகின்றன.இந்த மாநிலங்களில் நேரடியாக லாரி உரிமையாளர்களுக்கு மணல் தருகின்றனர். அதேபோன்று, தமிழகத்தில் 80 குவாரிகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக மணல் கிடைக்கும். தற்சமயம், மாநிலம் முழுவதும் அதிகளவில் மழை பெய்துள்ளது. அனைத்து ஆறுகளிலும் மணல் அளவு அதிகளவில் உள்ளது. எனவே, இதை பயன்படுத்தி அடுத்து வரும் அரசு, மணல் குவாரிகளை இயக்க வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள், மணல் உரிமையாளர்களை காப்பாற்ற வேண்டும்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்