கடந்த 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை மாற்றாத மத்திய பாஜ அரசு ; தேர்தல் முடிந்ததும் மொத்தமாக ஏற்ற திட்டம்

சென்னை: தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, பெட்ரோல், டீசல் விலையை கடந்த 24 நாட்களாக உயர்த்தாமல் மத்திய பாஜ அரசு வைத்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும், இதன்விலையை மொத்தமாக பன்மடங்கு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையை மையமாக கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில், அதாவது மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கச்சா எண்ணெய் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு பெருமளவு (20 டாலருக்கு கீழ்) சரிந்தது. ஆனால், அந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலை குறை வின் பலனை மத்திய பாஜ அரசு, மக்களுக்கு வழங்காமல் கலால் வரியை உயர்த்திக் கொண்டது. இதனால், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் அப்படியே வைத்துக் கொண்டது.இதன்பின், ஜூன் மாதத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. விலை அதிகரிக்க தொடங்கியதும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த தொடங்கினர். இதன் காரணமாக தற்போது, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100ஐயும், டீசல் ₹95ஐயும் எட்டியுள்ளது. பிற மாநிலங்களை பொருத்தளவில் சராசரியாக பெட்ரோல் ₹95க்கு விற்கப்பட்டு வருகிறது.இவ்விலையேற்றத்தை பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தபோது மட்டும் மத்திய பாஜ அரசு நிறுத்தி வைத்திருந்தது. சுமார் 35 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருந்துவிட்டு, பீகாரில் வாக்குப்பதிவு முடிந்த அடுத்தநாளில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டனர்.அதேபோல் தற்போது, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை கணக்கில் கொண்டு, கடந்த 28ம் தேதியில் இருந்து இன்று (23ம் தேதி) வரை தொடர்ந்து 24 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் மத்திய பாஜ அரசு வைத்துள்ளது. கடைசியாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி பெட்ரோல் 21 காசும், டீசல் 14 காசும் உயர்த்தப்பட்டது. தேர்தல் நேரத்தில் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அது வெற்றியை பாதிப்படைய செய்யும். மக்கள் தங்கள் அணிக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனக்கருதி பாஜ அரசு விலையேற்றத்தை நிறுத்தி வைத்துள்ளது.5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடியும் வரை பெட்ரோல், டீசல் விலையை ஒரேநிலையில் வைத்திருக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தை பொருத்தளவில், இன்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹93.11க்கும், டீசல் ₹86க்கும் விற்கப்படுகிறது. இதுவே சேலத்தில் பெட்ரோல் ₹93.54க்கும், டீசல் ₹86.89க்கும் விற்கப்படுகிறது.கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் பெட்ரோல் ₹4.30ம், டீசல் ₹4.74ம் அதிகரித்தது. நடப்பு மாதம் தேர்தலுக்காக விலையேற்றத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால், வாக்குப்பதிவு முடிந்தபின் மொத்தமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரணம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் ₹100க்கு அதிகமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எப்படியோ இனி வாகன ஓட்டிகளால், பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் தொகை ஒருபோதும் குறைய போவதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது….

Related posts

தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.56,760-க்கு விற்பனை..!!

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!