கடந்த 15 மாதங்களில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் ரூ.3,566 கோடி மதிப்புள்ள 2,710 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: கடந்த 15 மாதங்களில் திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 3566 கோடி ரூபாய் மதிப்புள்ள 2710 ஏக்கர் நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (19.10.2022) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில்  2021- 2022 மற்றும் 2022- 2023 ஆம் ஆண்டுகளுக்கான மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பணிமுன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள், சட்டமன்ற மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், திருக்கோயில்களில் புதிதாக அன்னதானத் திட்டம் தொடங்குதல் மற்றும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துதல், திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் திட்டத்தை விரிவுப்படுத்துதல், மருத்துவ மையங்கள் அமைத்தல், பசு மடங்களை மேம்படுத்துதல், திருக்கோயில் யானைகளுக்காக புதிய குளியல் தொட்டிகள் அமைத்தல் மற்றும் யானை நினைவு மண்டபங்கள் அமைத்தல், திருக்கோயில்கள் மூலம் 500 இலவச திருமணங்கள் நடத்துதல், சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் வசதிகள், மலைக் கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி அமைக்கும் பணிகள், துறையின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், திருக்குளங்கள் மற்றும் திருத்தேர் திருப்பணி, திருக்கோயில் நந்தவனங்களை மேம்படுத்துதல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சாய்வுதளங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தளபதியாருடைய தலைமையிலே புதிதாக அமையப்பெற்ற அரசு, இந்து சமய அறநிலை துறையில் நாகரிக வளர்ச்சிக்கேற்ப பல புதிய புதிய திட்டங்களையும், பக்தர்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவு செய்கின்ற, பக்தர்கள் இறை தரிசனத்திற்கு எல்லா வகையிலும் சிறப்புடன் திருக்கோயில்களை அமைத்து தருவது, ஆகம விதிப்படி  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த வேண்டிய திருக்கோயில்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு இதுவரையிலும் குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க திருக்கோயில்கள், நகரங்களில் இருக்கின்ற சிறிய சிறிய திருக்கோயில்கள் என்று அனைத்து திருக்கோயில்களும் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு வருகிறோம்.  அதே போல் கிராமப்புற திருக்கோயில்களிலும் தினந்தோறும் பூஜை நடைபெற வேண்டும் அங்கு பணிபுரியும் பூசாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் இப்படி எண்ணற்ற திட்டங்களை இந்து சமய அறநிலைத்துறையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்த 15 மாத காலங்களில் சிறப்போடு துறை சார்ந்த செயலாளர், ஆணையர், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள்,  துணை ஆணையர்கள், உதவி ஆணையாளர்கள்  மற்றும் செயல் அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றி கடந்த 15 மாதங்களில் அதிவேகமாக திருப்பணிகளும் குடமுழுக்குகளும் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று, கடந்த 15 மாதங்களில் குடமுழுக்குகள் என்று எடுத்துக் கொண்டால் இதுவரையில் 310 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடந்திருக்கின்றது. அதேபோல் ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 3118 ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி 2710 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்து சுமார் 3566 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கைப்பற்றப்பட்டு இருக்கின்றது. அதோட மட்டுமல்லாமல் மீட்கப்பட்ட சொத்துக்களை வாடகைக்கு விடவும், குத்தகைக்கு விடவும், அதேபோல் ஏற்கனவே திருக்கோவிலுக்கு சொந்தமான எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத இடங்கள், காலி மனைகள், கட்டிடங்களை வருவாய் ஈட்டுகின்ற அளவிற்கு அதை வாடகைக்கு விடுவதற்கு உண்டான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1500 திருக்கோயில்களில் 1000 கோடி ரூபாய் அளவில் திருப்பணிகள் மேற்கொள்ள அதற்குண்டான ஒப்புதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு தற்போது 48 முதல் நிலை திருக்கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,  அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 46(3) கீழ் இருக்கின்ற 578 ன் திருக்கோயில்களிலும் அன்னை தமிழில் அர்ச்சனையை கொண்டுவதற்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் அதற்குண்டான கலந்தாய்வு கூட்டமாக இந்த கூட்டம் நடைபெற்று இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த மாற்றுத்திறனாளிகள் திருமண ஜோடிகளில் ஒருவர் மாற்றுத்திறனாளி இருந்தால் கூட அவர்களுக்கு கட்டணம் இல்லாமல் இலவச திருமணம் என்று அறிவித்த திட்டத்தை மேலும் அதிகளவில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அதனை விரிவுபடுத்தவும், அதேபோல் திருக்கோயில்கள் மூலம் இந்தாண்டு 500 இலவச திருமணங்கள் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தோம் அந்த திருமணங்களை வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி தொடங்கி நடத்துவதற்கு உண்டான ஏற்பாட்டினை செய்கின்ற வகையிலும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.12 அம்மன் திருக்கோயில்களில் பௌர்ணமி தோறும் ஒவ்வொரு திருக்கோயிலிலும் 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கின்ற திருவிளக்கு பூஜை நடந்து கொண்டிருக்கின்றது. அதனை மேலும் விரிவுபடுத்துவது, அந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மகாசிவராத்திரி விழா முதன் முதலில் மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடத்தப்பட்டது. அது மேலும் ஐந்து சிவ ஆலயங்களில் விரிவுபடுத்துவதற்கு அறிவித்திருந்தோம். திருநெல்வேலி நெல்லையப்பர், கோவை பட்டீஸ்வரர், தஞ்சை பெரிய கோயில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆகிய ஐந்து இடங்களில் இந்த ஆண்டு சிவராத்திரி அன்று மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இரவு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு, அது குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டிருக்கின்றது. தமிழக அரசுக்கு, மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அவரது புகழுக்கு ஒரு வைரக்கல்லாக வள்ளலாரின் முப்பெரும் விழா அமைந்திருக்கின்றது.  இந்த விழாவினை  52 வார நிகழ்ச்சிகளை நடத்துவது தினந்தோறும் அன்னதானம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதோடுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 12 திருக்கோயில்களிலிருந்து வெளி மாநிலம், வெளிநாட்டில் இருக்கின்ற திருக்கோயில்களுக்கு வஸ்திர மரியாதை என்ற ஒரு திட்டத்தையும் புதிதாக கொண்டு வந்திருக்கின்றோம். ஏற்கனவே இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது என்றாலும் இந்த ஆண்டு அதிக அளவிற்கு அதாவது 12 திருக்கோயில்களில் செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இராமேஸ்வரத்திலிருந்து இருந்து காசிக்கு யாத்திரை செல்வதற்கு ஆண்டிற்கு 200 நபர்களை அனுப்புவதாக சட்டமன்ற அறிவிப்பிலே குறிப்பிட்டிருந்தோம் அதையும் செயல்படுத்துகின்ற ஒரு முயற்சியாக அது குறித்தும், திருக்கோயில் பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டத்தை தொடர்ந்து நடத்துவது குறித்தும், அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணிகள் குறித்தும், தற்போது மூன்று சித்தர்களுக்கு விழா எடுப்போம் என்று அறிவித்திருந்தோம் அதில் ஏற்கனவே இரண்டு சித்தர்களுக்கு விழா எடுத்து விட்டோம் மூன்றாவது சித்தரான பாம்பாட்டி சித்தருக்கு சங்கரன்கோவிலில் விழா எடுப்பது குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறு ஆண்டுகள் மேற்பட்ட பழமை வாய்ந்த 100 சிறிய கோயில்களுக்கு ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ரூபாய் 15 லட்சம் செலவில் அனைத்து திருக்கோயில்களையும் புனரமைத்து குடமுழுக்கு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.  இந்த கூட்டத்தில் ஒட்டுமொத்தமாக கடந்த 2021 – 22 அறிவிக்கப்பட்டிருந்த 112 அறிவிப்புகள், 2022 – 23 அறிவிக்கப்பட்டிருந்த 165 அறிவிப்புகள், 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணிகளின் நிலை குறித்தும் காலையிலிருந்து இந்த கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இன்றைக்கு நடைபெறுவது 14-ஆவது கூட்டமாக இந்த கூட்டமாகும். ஆக்கப்பூர்வமாக பல்வேறு ஆலோசனைகளும் பல்வேறு வளர்ச்சிக்குண்டான பணிகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் நிறைவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஐந்து திருக்கோயில்களில் ரோப் காரை அறிவித்திருந்தார் அந்த ரோப் கார் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், பழனியிலே ஜனவரி மாதம் நடைபெற இருக்கின்ற குடமுழுக்கு சம்பந்தமாகவும் முழுமையாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. அரசு துறை அதிகாரிகள் என்றால் காலையிலிருந்து மாலை வரை என பணியின் அளவு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். இந்த துறையை பொறுத்த அளவில் காவல்துறைக்கும் ராணுவத்திற்கும் மருத்துவத்துறைக்கும் எப்படி நேர காலம் என்பது கிடையாதோ அதேபோல் முழு நேர களப்பணியிலே இந்து சமய அறநிலையத்துறை இன்றைக்கு தங்களை முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றது. ஒரு வரலாற்று சிறப்புமிக்க காலமாக மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் காலம் இந்து சமய அறநிலையத்துறையிலே எந்நாளும் மறக்க முடியாத அளவிற்கு பொண்ணெழுத்துக்களால் வரலாற்றிலேயே பதிக்கப்படுகின்ற அளவிற்கு இந்த துறை செயல்படும் என்று தெரிவித்தார். முன்னதாக மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், சேலம் உதவி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி பணி காலத்தில் உயிரிழந்த சிவக்குமாரின் என்பவரின்  வாரிசுதாரர் திரு.சி.மோகன் ராஜ் அவர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை வழங்கினார். இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன்,இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்பிரியா, தலைமைப் பொறியாளர் திரு.சு.ரெகுநாதன், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், அரசு அலுவலர்கள்  மற்றும் பொறியாளர்கள்  கலந்து கொண்டனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை