கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்தபடி ஜனவரி முதல் உதவித்தொகை ₹1,000 உயர்த்தி வழங்கப்படும் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி, டிச. 13: புதுவையில் வரும் ஜனவரி மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா நேற்று நடந்தது. சமூக நலத்துறை இயக்குனர் குமரன் வரவேற்றார். சமூக நலத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் நோக்கவுரை ஆற்றினார். சபாநாயகர் செல்வம் வாழ்த்தி பேசினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு 23 மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில விருது, சான்றிதழுடன் தலா ரூ.10 ஆயிரம் வெகுமதி வழங்கினர். தொடர்ந்து, 360 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர நிதியுதவி பெறுவதற்கான ஆணையும், 8 பேருக்கு சக்கர நாற்காலியும், 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிளும், கண்பார்வையற்றவர்களுக்கு ஸ்மார்ட் வாட்சும் வழங்கினர். மேலும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு வழங்கினர்.

பின்னர், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: முன்பெல்லாம் மாதாந்திர உதவித்தொகை சரியாக கிடைக்கவில்லை என்று குறையாக சொல்லும் காலம் இருந்தது. இப்போது, உதவித்தொகை குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைக்கிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் அறிவித்த சில திட்டங்கள் செயல்படுத்தாமல் இருக்கலாம். இருந்தாலும், அந்த திட்டங்களையும் செயல்படுத்த அரசு முனைப்பாக இருந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் சரியான முறையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு அக்கறை உண்டு. ஆனால், பல பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அப்படி நிரப்பப்படும் போது, உங்களுக்குரிய இடஒதுக்கீடு வழங்க அரசு கவனம் செலுத்தும்.

அதிகமாக எண்ணிக்கையில் அசிஸ்டென்ட் பதவி விரைவில் நிரப்பப்படவுள்ளது. இப்பணிக்கான தேர்வில் பங்கேற்று உங்களுக்குரிய இடதுக்கீட்டை பெற்று கொள்ள படித்தவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
குரூப் 4 பிரிவு பணியிடங்கள் இப்போது அரசால் நிரப்ப முடியவில்லை. இதனால் அவுட்சோர்ஸ் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் அறிவித்தபடி வரும் ஜனவரி முதல் உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தி கொடுக்கப்படும். புதுச்சேரியில் 21 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். நீங்கள் வைக்கும் கோரிக்கையை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்களது கோரிக்கைகளை சமூக நலத்துறை அமைச்சரையும், என்னையும் சந்தித்து கூறலாம். உங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு செய்து கொடுக்கும். இவ்வாறு அவர் பேசினார். துணை இயக்குனர்கள் கனகராஜ், ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கடந்தாண்டு அறிவிப்பு என்ன ஆனது? முதல்வரிடம் சரமாரி கேள்வி
இவ்விழாவில் முதல்வர் சிறப்புரை ஆற்றிவிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கி கொண்டிருந்தார். அப்போது, மாற்றுத்திறனாளி ெஜகன் என்பவர் விழா மேடை அருகில் அமர்ந்து கொண்டு, கடந்தாண்டு நடந்த விழாவில் 25 சதவீதம் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அந்த அறிவிப்பு என்ன ஆனது? ஏன் அறிவித்தப்படி 25 சதவீதம் உதவித்தொகையை உயர்த்தி வழங்கவில்லை என தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார். இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை