கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான 18 அவதூறு வழக்குகள் ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக ஆட்சியில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட 18 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வரின் செயல்பாடுகளை விமர்சித்தது,  டெண்டர் முறைகேடு, வாக்கிடாக்கி கொள்முதல்  உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள்  குறித்து கருத்து தெரிவித்ததாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த  மு.க.ஸ்டாலினுக்கு எதிராக 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசின்  சார்பில்  தொடரப்பட்டன. இந்த செய்திகளை வெளியிட்ட முரசொலி ஆசிரியர்  செல்வம் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் எம்.பி,  எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  விசாரணையில் உள்ளன. இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி  முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள்  தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம்,  சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதித்திருந்தது.  இதற்கிடையே, தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு, முந்தைய ஆட்சியில்  அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக  தொடரப்பட்ட அனைத்து அவதூறு  வழக்குகளையும் திரும்பப் பெற்று அரசாணை பிறப்பித்துள்ளது. அதேபோல  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 18 அவதூறு வழக்குகளை  திரும்பப்பெற தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில்,  தனக்கு எதிரான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல்  செய்த மனுக்கள்  நீதிபதி நிர்மல்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 18 கிரிமினல்  அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பான அரசாணையை கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த வழக்குகள் தொடர்பான விவரங்களை அட்டவணையாக  தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த  மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த  வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், அவதூறு  வழக்குகளை திரும்பப் பெற்ற அரசாணை, மு.க.ஸ்டாலின் தரப்பில் தாக்கல்  செய்யப்பட்ட மனுக்கள் ஆகியவை ஏற்கப்படுகிறது என்று கூறி 18 அவதூறு வழக்குகளையும்  ரத்து செய்தார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை