கஞ்சா பொட்டலத்தை தொடர்ந்து கடலூர் மத்திய சிறைச்சாலைக்குள் மதுபாட்டில்களை வீசி சென்ற மர்ம நபர்கள்

கடலூர், செப். 7: கடலூர் மத்திய சிறைக்குள் மது பாட்டில்களை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துகிறார்களா மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை செய்து அவ்வப்போது செல்போன் மற்றும் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வழக்கம்போல் போலீசார் மத்திய சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மத்திய சிறை வளாகத்தில் பாட்டில்கள் வந்து விழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது.

இதனால் உஷாரான போலீசார் சத்தம் கேட்ட இடத்துக்கு சென்று பார்த்த போது, அங்கு சுமார் 15 மது பாட்டில்கள் கிடந்துள்ளன. அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிளாஸ்டிக் வகை மதுபானங்கள் என்பது தெரியவந்தது. இதை மர்ம நபர்கள் யாரோ வெளியில் இருந்து, சிறைக்குள் வீசியது தெரியவந்தது. இதை பார்த்த போலீசார் வெளியே சென்று பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து மத்திய சிறை வார்டன், கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் மத்திய சிறையில் கஞ்சா பொட்டலத்தை வீசிவிட்டு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் மத்திய சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

எண்ணூர் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாணவன் பரிதாப பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை

துரைப்பாக்கம், முகப்பேர் பகுதியில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு