ஓம் நமச்சிவாயா பக்தி கோஷம் முழங்க நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன உற்சவ விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம், ஜூலை 13: ஓம் நமச்சிவாயா பக்தி கோஷம் முழங்க சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன உற்சவ விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் மட்டும் மூலவர் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மாள் கோயிலுக்கு வெளியில் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவதுண்டு. இதனால் இந்த இரண்டு விழாக்களும் தனி சிறப்பு உண்டு. இந்தாண்டுக்கான ஆனி திருமஞ்சன உற்சவ திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, விமர்சையாக நடந்து வருகிறது. தினமும் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து வெள்ளி சந்திர பிறை வாகன வீதி உலா, தங்க சூரிய பிறை வாகன வீதி உலா, வெள்ளி பூதவாகன வீதி உலா, வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), வெள்ளி யானை வாகன வீதி உலா, தங்க கைலாச வாகன வீதி உலா, தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் தேர்த்திருவிழா மற்றும் ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடந்தது. இதையடுத்து நேற்று அதிகாலை 2.20 மணி முதல் 5.20 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம், சொர்ணாபிஷேகம் காண்பிக்கப்பட்டு, 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை மற்றும் நான்கு வீதிகளிலும் பஞ்ச மூர்த்தி வீதி உலா நடந்தது.

பின்னர் 2.15 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனம் நடந்தது. இதில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து வெளியே வந்து முன்னும் பின்னும் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற்றது. அப்போது மண்டபம் எதிர் பகுதியில் திரண்டு இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாய என்ற கோஷத்துடன் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆனி திருமஞ்சன தரிசனத்தை கண்டு களித்தனர். இதையடுத்து 2.30 மணிக்கு கோயிலுக்குள் ெசன்றது.

இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாட்டை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், சிவனடியார் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இன்று (13ம் தேதி) பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 14ம் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மேற்பார்வையில் நகர போலீஸ் ஆய்வாளர் ரமேஷ்பாபு, அண்ணாமலை நகர் காவல் நிலைய ஆய்வாளர் கல்பனா, உதவி ஆய்வாளர் பரணிதரன் உள்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

சீட் திட்டத்தில் பயன்பெற சீர் மரபினர் விண்ணப்பிக்கலாம்

பஸ் நிலையத்தில் பொருட்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

ராஜபாளையம் அருகே காற்றின் வேகத்தால் கடல்போல் காட்சியளிக்கும் கண்மாய்