ஓட்டேரி இளம்பெண் தற்கொலை வழக்கில் திருப்பம் லண்டனில் இருந்து பரிசுப்பொருள் அனுப்பியதாக பணம் கேட்டு மிரட்டிய நைஜீரிய வாலிபர் கைது

* டெல்லியில் வைத்து சுற்றிவளைத்தது தனிப்படை
* இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்

பெரம்பூர், ஜூலை 16: ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பராக்கா ரோடு முதல் தெருவை சேர்ந்த சுதாகர் மகள் அஸ்வினி (20). பியூட்டிஷியன் வேலை செய்து வந்த இவர், கடந்த 6ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தலைமை செயலக காலனி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அஸ்வினி தனது தாய்க்கு எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், எனது சாவிற்கு லண்டனில் இருந்து என்னை தொடர்பு கொண்டு பேசிய நபர் தான் காரணம், ஐ லவ் யூ அம்மா என்றும் உருக்கமாக எழுதி வைத்து இருந்தார். மேலும் விசாரணையில், அஸ்வினியுடன் ஒருவர் செல்போனில் அடிக்கடி பேசியது தெரிந்தது. அவர் பற்றி விசாரிக்க கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி உத்தரவிட்டிருந்தார்.

அதன்பேரில், அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் மேற்பார்வையில், தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். அதில், டெல்லியை சேர்ந்த நபர், அஸ்வினியை மிரட்டியது தெரிய வந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் தலைமையிலான குழுவினர், கடந்த 7ம் தேதி டெல்லி சென்று, நியூ டெல்லி சாயிப் பூரா பகுதியை சேர்ந்த மூசா (30) என்ற நபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர் என்பதும், டெல்லியில் தங்கி ஆன்லைன் மூலம் பலரை ஏமாற்றி பணம் பறித்து வந்ததும் தெரிய வந்தது. அவரை நேற்று காலை சென்னை அழைத்து வந்து விசாரித்தபோது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன.

ஓட்டேரியை சேர்ந்த அஸ்வினி தற்கொலை செய்து கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இன்ஸ்டாகிராம் மூலம், லண்டனை சேர்ந்தவர் என்று கூறி மூசா அறிமுகம் ஆகியுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து அவர் அஸ்வினிக்கு மெசேஜ் அனுப்பி, அவரை காதலிப்பதாக கூறி வந்துள்ளார். ஆனால் அஸ்வினி வெளிநாட்டைச் சேர்ந்த மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் எனக் கூறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மூசா, லண்டனில் இருந்து உங்களுக்கு விலை உயர்ந்த கிப்ட் அனுப்பி உள்ளேன், அதனை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களை சுங்கத்துறையில் இருந்து தொடர்பு கொள்வார்கள் எனக் கூறி இனணப்பை துண்டித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரே வேறொரு எண்ணில் இருந்து அஸ்வினிக்கு போன் செய்து, சுங்கத்துறையில் இருந்து பேசுவதாகக் கூறி பணம் கட்டச் சொல்லி உள்ளார்.

அஸ்வினியும் அதை நம்பி, ₹25 ஆயிரம் பணம் கட்டி உள்ளார். அதன் பிறகு மீண்டும் ₹20 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறியதால், அதிர்ச்சியடைந்த அஸ்வினி மன உளைச்சலில் கிப்ட் வேண்டாம் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூசா, உங்களது முகவரி மற்றும் தொலைபேசி எண் என அனைத்தும் எங்களிடம் உள்ளது. சுங்கதுறை அதிகாரிகள் இன்னும் சிறிது நேரத்தில் உங்களை வந்து கைது செய்து விடுவார்கள் என மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அஸ்வினி தனது தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘அஸ்வினி கூகுள் பே மூலம் மூசாவுக்கு பணம் அனுப்பியுள்ளார். குறிப்பிட்ட அந்த எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது, அது டெல்லியில் இருந்து இயக்கப்படுவதை தெரிந்தது. அங்கு சென்று, வங்கி மூலம் மூசாவை சுற்றி வளர்த்து கைது செய்து சென்னை அழைத்து வந்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தோம்,’’ என்றனர்.

* போலி அக்கவுன்ட்
வெளிநாடுகளைச் சேர்ந்த நபர்கள் இந்தியாவுக்கு வரும்போது அவர்கள் வங்கி கணக்கு தொடங்குவது என்பது மிகவும் சவாலான விஷயம். அதற்கு பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதனால் மூசா டெல்லியைச் சேர்ந்த ஒரு ஏஜென்ட் மூலமாக 5 வங்கிகளில் அக்கவுன்ட் துவங்கி உள்ளார். அந்த 5 வங்கி ஏடிஎம் கார்டுகளையும் மூசா வாங்கி வைத்துக்கொண்டு அவர் பயன்படுத்தி வந்துள்ளார். அவர் பயன்படுத்திய அக்கவுன்ட் குளுலு என்ற பெயரில் உள்ளது. உண்மையில் இந்த குளுலு யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபோன்று பொதுமக்களை ஏமாற்றுபவர்கள் அவர்களது அக்கவுன்டில் பணம் போட்டுக் கொள்ளாமல் ஏஜென்ட் மூலமாக பல அக்கவுன்ட்களை பெற்று, அதன் மூலம் பணம் பெறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட தொகை ஏமாற்றியதும் அவர்களது ஏடிஎம் கார்டை தூக்கி எறிந்து விட்டு சென்று விடுகின்றனர்.

* தொடரும் உயிரிழப்புகள்
தற்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்பின் தெரியாதவர்கள் போன் செய்து பாஸ்வேர்டை கேட்டால் சொல்ல வேண்டாம் எனவும், தேவையில்லாத லிங்க் செய்திகளை தொட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர். கிப்ட் வந்துள்ளது, கூப்பன் வந்துள்ளது என பணம் கட்டச் சொன்னால் கட்ட வேண்டாம் எனவும், முன்பின் தெரியாதவர்களுக்கு தனிப்பட்ட தகவல்களை அனுப்ப வேண்டாம் எனவும் போலீசார் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வாறு செய்தாலும்கூட படித்த இளைஞர்கள் தொடர்ந்து ஏமாறுவதும், இதனால் அவர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதும் தொடர் கதையாகி வருகிறது.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து