ஓடும் பஸ்சில் நகை திருடிய 2 பெண்கள் சிக்கினர் போலீசில் ஒப்படைப்பு செய்யாறு அருகே

செய்யாறு, ஜூலை 4: செய்யாறு அருகே ஓடும் பஸ்ஸில் பயணியிடம் நகையை திருடிக்கொண்டு தப்ப முயன்ற 2 பெண்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்‌. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவரது தாய் ஊரான திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழாத்தூர் கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு வந்திருந்தார். பின்னர், திருவிழா முடிந்ததும் தனது கைக்குழந்தையுடன் நேற்று காலை செய்யாறு பஸ் ஸ்டாண்டுக்கு வந்து காஞ்சிபுரம் செல்லும் தனியார் பஸ்ஸில் பயணம் செய்தார். இந்நிலையில், பஸ் புறப்பட்டு சுமார் 10 கிலோ மீட்டர் சென்றதும் 2 பெண்கள் இருமந்தாங்கல் கிராமத்தில் பஸ்ஸில் இருந்து இறங்கினர். அவர்கள் ஆரணியில் இருந்து காஞ்சிபுரம் செல்ல டிக்கெட் எடுத்துவிட்டு பாதியில் இறங்கியுள்ளனர். உடனே கண்டக்டர், அந்த பெண்களின் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளது. அதனால் பஸ்ஸில் அனைவரின் உடமைகளும் பத்திரமாக உள்ளதா என சரிபார்க்கவும் என பயணிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து, சங்கீதா தனது பையை சோதித்து பார்க்கையில் ஒரு சவரன் தங்க நகை, வெள்ளி கால் கொலுசு மற்றும் ₹2 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்த பர்சை காணவில்லை எனக்கூறி கூச்சலிட்டார். அதனை 2 பெண்கள் திருடிக்கொண்டு சென்றிருக்கலாம் என சந்தேகித்து, உடனே பஸ் நிறுத்தி சங்கீதாவை இறக்கிவிட்டனர். அங்கிருந்து வழியில் சென்ற நபர் ஒருவரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு, இருமந்தாங்கல் கிராம பஸ் நிறுத்தம் வந்த சங்கீதா தன்னுடன் பஸ்சில் வந்து நகைகளை திருடிக்கொண்டு தப்பிச்சென்ற 2 பெண்களையும் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மடக்கி பிடித்தார். அவர்களது உடமைகளை சோதனை செய்ததில் சங்கீதாவின் பர்ஸ் இருந்தது.

இதையடுத்து, செய்யாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், பெண் பயணியிடம் கைவரிசை காட்டி சிக்கியவர்கள் செங்கம் அடுத்த ராவந்தவாடி கட்டமொருவு கிராமம் குட்டை தெருவை சேர்ந்த சண்முகம் மனைவி ஈஸ்வரி(37), வடிவேல் மனைவி நந்தினி(31) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சங்கீதாவின் நகை மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் இருவரும் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது‌. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை