Tuesday, July 16, 2024
Home » ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம்

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் 7-9-2022 வாமன ஜெயந்தி8-9-2022 ஓணம் பண்டிகைபகவான் பல அவதாரங்களை எடுத்திருந்தாலும் வாமன திருவிக்ரம அவதாரங்களை, மிகவும் சிறப்பாக ஆழ்வார்களும், ரிஷிகளும் போற்றுவார்கள். வைணவத்தில் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான நாமங்கள் உண்டு. பேர் ஆயிரம் உடைப் பெரியோன் என்று அவருடைய எண்ணற்ற நாமங்களைச் சொல்வது வழக்கம். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று பெருமாளுடைய நாமங்களைச் சொல்லும் புகழ்பெற்ற பாராயண நூல் உண்டு. ஆயிரக்கணக்கான நாமங்களில் 12 நாமங்களை முக்கியமாகச் சொல்வார்கள். இதை துவாதச நாமங்கள் என்று சொல்லும் மரபு உண்டு. இந்தப் பன்னிரண்டு நாமங்களில் வாமன திருவிக்ரம நாமங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றிருப்பதைப்  பார்க்கலாம்.ஒரே அவதாரத்தின் இரண்டு பகுதிகள் வாமன திரிவிக்கிரம அவதாரங்கள். அங்க பூஜையில் இந்த நாமங்கள் முக்கியம். வாமனன் என்பது அவதாரத்தின் துவக்கத்தையும் (பூர்வம்) திரிவிக்கிரமன் என்பது அவதாரத்தின் முடிவையும் (உத்தரம்) குறிக்கும். இந்த அவதாரத்தின் பெருமையை வேதம் பல பகுதிகளில் போற்றுகிறது. பொதுவாக திரிவிக்கிரம அவதாரத்தைப் பற்றி வேதத்தில் இருக்கும் அளவுக்கு அதன் மூல அவதாரமான வாமன அவதாரத்தைப் பற்றிய செய்திகள் அதிகமில்லை.யார் இந்த வாமனன்? தேவர்களும், அசுரர்களும் அதிதியின் பிள்ளைகள். தந்தை கஸ்ய பிரஜாபதி. அசுரர்களின் ராஜாவும், பிரகலாதனின் பேரனுமான மகாபலிச் சக்கரவர்த்தி, மிகப்பெரிய பலத்தோடு யாகங்கள் பல செய்தான். அதன் மூலம் பெற்ற பல்வேறு வரங்களும் ஆயுதங்களும் கொண்டு போர்புரிந்தான். தேவர்களை விரட்டிவிட்டான். தேவர்களுக்கு நாடு நகரம் இல்லாமல் போயிற்று. தன் பிள்ளைகள் துன்பப்படுவதைக் கண்டு தாயான அதிதி தேவி மிகவும் துக்கப்பட்டாள். இதற்கு ஒரே வழி பகவானை சரணடைவது தான் என்று சொல்லி பயோவிரதம் என்ற ஒரு விரதத்தை கஸ்ய பிரஜாபதி அனுஷ்டிக்கச் சொன்னார். அந்த விரதத்தின் பலனாக பகவான் மன் நாராயணன் காட்சிதந்து “மகாபலி சக்கரவர்த்தியை போர் புரிந்து வெல்லமுடியாது. அடுத்து அவன் பிரகலாதன் வம்சத்தில் தோன்றியதால், பிரகலாதனுக்கு தந்த வரத்தின்படி, அவனைக் கொல்லமுடியாது. இந்திரனுக்கும் வாழ்வு தர வேண்டும். மகாபலி சக்கரவர்த்திக்கும் வாழ்வு தர வேண்டும். எனவே நானே உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்” என்று சொல்லி கஸ்ய பிரஜாபதிக்கும் அதிதி்க்கும் மகனாக அவதரித்தார். அவர் அவதரித்த காலம் சாந்த்ரமான மாத கணக்கின்படி புரட்டாசி மாதம் வளர்பிறை திருவோண நட்சத்திரம் துவாதசி நாள். (தமிழகத்தில் ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு வருவது.) ஒவ்வொரு ஏகாதசிக்கும்  ஒவ்வொரு பெயர் இருப்பது போலவே, ஒவ்வொரு துவாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. புரட்டாசி மாத வளர்பிறை துவாதசிக்கு வாமன துவாதசி என்று பெயர். விஜய துவாதசி என்றும் பெயர். இந்த துவாதசியில் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் வெற்றி அடையும்.எப்படி அவதரித்தார்?அவருடைய அவதார விசேஷத்தை ஸ்ரீமத் பாகவதம் அற்புதமாக விவரிக்கிறது. மதுராவில் பின்னால் கண்ணன் எப்படி அவதரிக்கப்போகிறாரோ, அதற்கு முன்னோடியாக வாமனன் அவதரித்தார். இரண்டு காதுகளிலும் அற்புதமான பொற் குண்டலங்கள் அசைந்தாடியது. தோள்வளை, கங்கணமும் தோள்களில் ஜொலித்தது. மார்பிலே ஸ்ரீவத்ஸம் என்னும் மறு பிரகாசித்தது. கால்களிலே தண்டையும் சிலம்பும் அசைந்து பிரணவாகார ஒலியை எழுப்பியது. மார்பில் அழகான வன மாலை தவழ்ந்தது. கொள்ளை கொள்ளும் புன்னகையுடனும், நான்கு கரங்களுடனும், சியாமள மேனி வண்ணனாக பகவான் அவதாரம் செய்தார். இந்திரனுக்கு தம்பியாக அவதாரம் செய்ததால், அவருக்கு உபேந்திரன் என்கிற திருநாமமும் உண்டு. அவர் அவதாரம் செய்தபொழுது, தேவ துந்துபிகள் முழங்கின. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். ரிஷிகளும் முனிவர்களும் அவரை வரவேற்று தோத்திரங்கள் பாடினர். சித்தர்களும், கந்தர்வர்களும், மங்கலமான பாடல்களை இசைத்தனர்.திருவோண நட்சத்திரத்தின் சிறப்புஅவர் அவதாரம் செய்த திருநட்சத்திரம் சிரவண நட்சத்திரம் என்று அழைக்கப் படும் திருவோண நட்சத்திரம். திருவோண நட்சத்திரம், திருவாதிரை நட்சத்திரம் என்ற இரண்டு நட்சத்திரங்கள் மட்டும் திரு என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நட்சத்திரங்கள். திருவோணம் சந்திரனுக்குரிய நட்சத்திரம். சந்திரனுக்குரிய ராசி, கடக ராசி. நான்காவது ராசி. வித்தையையும், சொத்தையும், பூமி, வீடு, வாசல், முதலியவற்றைச் சொல்லும் ராசி. வாமன அவதார மாதம் புரட்டாசி மாதம். கன்னி ராசி மாதம். ஆறாவது ராசி. வெற்றியைக் குறிக்கும் ராசி. திருவோண நட்சத்திரம் இருக்கக்கூடிய ராசி மகர ராசி. பத்தாவது ராசி. கர்மாவைக் குறிக்கக்கூடிய ராசி. செயலைக் குறிக்கக்கூடிய ராசி. கௌரவத்தைக் குறிக்கக்கூடிய ராசி.புகழைக் குறிக்கக்கூடிய ராசி. பகவான் நான்காவது ராசியாகிய சொத்தைப் பெறுவதற்காக, 10வது ராசியாகிய செயலைச் (கர்மா) செய்து, ஆறாவது ராசியாகிய வெற்றியைப் பெற்றார். திருவோண நட்சத்திரம் மிகச் சிறப்பான நட்சத்திரம். திருவோண நட்சத்திரம் வானத்தில் மகர ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம். நாம் கண்களில் காணும் போதும் மூன்று பாதங்கள் போலவும், அம்பு போலவும், அன்னப்பறவை போலவும், முழக்கோல் போலவும் காட்சி அளிக்கும். திருவோணம் இருக்கக்கூடிய ராசியில் சனி மற்றும் செவ்வாய் பலம் பெறுகிறது. செவ்வாய் பூமிகாரகன் அல்லவா. எனவே பூமியை அளந்து பெற இந்த நட்சத்திரத்தை தன்னுடைய அவதார நட்சத்திரமாக பகவான் தேர்ந்தெடுத்தார். திரு என்பது ஐஸ்வர்யத்தைக் குறிக்கும். எனவே சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தருவதற்காக திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். திருவோண நட்சத்திரத்தின் பெருமையை பெரியாழ்வார் ஒரு பாசுரத்தில் மிக அற்புதமாகப் பாடுகின்றார். அதில் பிறந்த ஆண்மக்கள், ‘‘இவனுக்கு நிகராக வேறொருவர் இல்லை” எனும் படியாக, நல்ல கல்வியைப்பெற்று, வாழ்வில் பெரு வெற்றியையும்  பெற்று, இந்த உலகத்தை ஆளும் தலைமை பீடத்தை அலங்கரிப்பார்கள்.பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்திடில்காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்ஆணொப்பார் இவன் நேரில்லை காண்திருவோணத்தான் உலகாளும் என்பார்களேவாமனனுக்கு உபநயன வைபவம்கண்ணனைப் போலவே வாமனரும் அவதார காலத்தில் நான்கு கரங்களோடு பிறந்தார். குழந்தையின் அழகைப் பார்த்து தேவர்களும், ரிஷிகளும் ஆச்சரியப்படுகிறார்கள். வாமன அவதாரத்தின் இன்னொரு முக்கியமான சிறப்பு, அவர் பிறந்து, அந்தக் காட்சியைத் தாய் தந்தையருக்கு காட்டிய அடுத்த நிமிடமே, ஐந்து வயது பாலகனாக மாறி உபநயனத்திற்குத் தயாராக இருந்தார்.அதாவது, வாமனன் பிறந்த நாளன்றே உபநயனமும் ஆகிவிடுகிறது என்பது வாமன அவதாரத்திற்கு ஒரு சிறப்பு. காரணம் என்னவென்றால், வாமன அவதாரம் எடுத்த காலத்தில், பலிச் சக்கரவர்த்தி, நர்மதை ஆற்றின் வடக்குக் கரையில் அஸ்வமேதயாகம் செய்துவந்தான். அந்த யாகம் நிறைவேறுவதற்குள், யாசகம் கேட்டு, பூமியைப் பெற வேண்டும் என்பதற்காகவே, பிறந்த அதே நாளில், ஐந்து வயது பாலகனாக வாமனன் வளர்ந்து விட்டார். ஐந்து வயதாகிய பொழுது, அவருக்கு உபநயனம் செய்துவைக்கிறார்கள். ஸவிதா தேவதை காயத்ரி மந்திரத்தை, குழந்தைக்குச் சமர்ப்பிக்கிறார். பிரகஸ்பதி யக்னோபவீதத்தைத் தருகிறார். கஸ்யப மகரிஷி மேகலையைக் கொடுக்கிறார். பூமாதேவி மான்தோலை தருகிறாள். ஆகாயம் அவருக்கு ஒரு அழகான குடையைச் (சத்ரம்) சமர்ப்பிக்கிறது. நான்முகன் கமண்டலத்தைத் தருகிறார். சப்த ரிஷிகள் நாணல் கட்டுக்களைத் (தர்ப்பை) தருகிறார்கள். சந்திரன் தண்டம் தந்தான். தாய் அதிதி கௌபீன வஸ்திரத்தைத் தந்தாள். கலைமகள் அக்ஷர மாலையைத் தர, செல்வங்களுக்கு அதிபதியான குபேரன் பிச்சைப் பாத்திரத்தைத் தருகின்றான். சாட்சாத் உமாதேவி உபநயனம் ஆன வாமனனுக்கு முதல் பிச்சையை கொடுக்கிறாள். இந்த வைபவம் ஸ்ரீமத் பாகவதத்தில் மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மச்சாரிக்குரிய அத்தனைக் கடமை களையும் வாமனன் செய்தார் என்கிற விவரம் புராணங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது.மகாபலி கதை பொதுவாக வாமன அவதாரத்தின் கதை ஒரே விதமாகவே புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டு இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், இந்தக் கதைகளின் அமைப்புக்கள் வேதங்களிலும் புராணங்களிலும் வெவ்வேறு விதமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் பிரதானமான கதைதான் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு திரிவிக்கிரம அவதாரமாக மாறி மண்ணையும் விண்ணையும் அளந்தது. பிரகலாதனின் பேரனான மகாபலி சக்கரவர்த்தி, சகல லோகங்களையும் வென்றான். 100 அஸ்வமேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான். அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால், தேவர்கள் அனை வரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர். இந்திரன் தன்னுடைய உலகத்தை தனக்கு எப்படியாவது பெற்றுத் தர வேண்டும் என்று பெருமாளிடம் பிரார்த்திக்க, அவர் “ மகாபலி பிரகலாதனின் பேரன் ஆக இருப்பதால், சண்டை செய்ய விரும்பாது, பிரம்மச்சாரியாக சென்று யாசித்து, இந்திரனின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்” என்று எடுத்த அவதாரமே வாமன அவதாரம். பிறகு அவன் பலிச் சக்கரவர்த்தியிடம் சென்று மூன்று அடி மண் கேட்க, அவரும், ‘‘இந்த சிறு பிள்ளை பாவம், மூன்று அடி மண்தானே கேட்கிறான். தந்தால் என்ன குறைந்துவிடப் போகிறது” என்று தானம் தரச் சம்மதிக்கிறான். பகவான் திரிவிக்கிரமனாக ஓங்கி உலகளந்தான். மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு, பலிச் சக்கரவர்த்தியின் தலையில் திருவடியை வைத்து, பாதாள உலகத்துக்கு அனுப்பினார் என்பது கதை.மகாபலி கேரள தேசத்தை ஆண்ட மன்னனாகவும், அவன் பாதாள உலகத்தில் இருந்து, வருடம் ஒரு முறை தன்னுடைய மக்களைப் பார்ப்பதற்காக வருவதாகவும், அவன் வரும் நாளே திருவோண நன்னாள் என்றும் கேரள மக்கள் கருதி, பாரம்பரிய திருவிழாவாக ஓணம் பண்டிகையை மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். வேதத்தில் வாமனன் கதை ஆனால், `சதபத பிராமணம்’ என்னும் நூலில் வேறுவிதமாகவும் இக்கதை சொல்லப்படுகிறது. கஸ்ய பிரஜாபதியின் பிள்ளைகள் தேவர்களும் அசுரர்களும். அவர்கள் தங்களுக்குள் தனித்தனி குழுவாகச் செயல்பட்டார்கள். இதில் அசுரர்கள் இந்த உலகத்தை எல்லாம் ஆக்ரமித்து தங்களுக்குள் பிரித்துக் கொள்ள இருந்தார்கள். வலிமையான அசுரர்கள் பிரித்துக் கொண்டால் தேவர்கள் எங்கே போவார்கள்? எனவே அவர்கள் மன் நாராயணனைச் சரணடைந்து தங்களுக்கு வாழ்வு கேட்டார்கள். அவர் அசுரர்களிடம் பங்கு கேட்கும் படி கூறினார். மன் நாராயணன் அப்போது வாமன அவதாரம் எடுத்து இருந்தார். அசுரர்களிடம் சென்று தேவர்கள், ‘‘நாங்களும் உங்களுக்கு பங்காளிகள் தானே.. எனவே எங்களுக்கும் பங்கு வேண்டும்” என்று கேட்க, ‘‘உங்களுக்குப் பங்கு தானே வேண்டும்?”என்று எகத்தாளமாகக் கேட்டு, தேவர்களோடு நின்று கொண்டிருந்த வாமன மூர்த்தியைக் காட்டி, ‘‘இந்த வாமனன் அளவுக்கு உங்களுக்கு நாங்கள் பங்கு தருகிறோம் எடுத்துக்கொண்டு செல்லுங்கள்” என்று சொல்ல, பகவான் தேவர்களிடம் “அவர்கள் சொல்வது போல, என் காலால் மூன்றடி தந்தால் போதும் என்று சொல்லி ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றார். அப்படியே தேவர்களும் அசுரர்களிடம் சொல்ல, அசுரர்கள், ‘‘இந்தக் குள்ளனின் கட்டைக்கால் அளவுக்கு இடம் தந்தால் போதும் அல்லவா.. ம்.. அளந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கேலியாகச் சொல்லிச் சிரித்தனர்.அப்போது வாமன மூர்த்தி உலகம் முழுக்க வியாபிக்கும் திரிவிக்கிரம அவதாரம் எடுத்தார். ‘‘நீங்கள் சொன்னபடி என்னுடைய காலால் நான் உலகத்தை அளந்து கொள்ளுகின்றேன்” என்று விஸ்வரூபம் எடுத்தார் பரமாத்மா. அந்த விஸ்வரூபத்தின் மூலரூபம் வாமனன். எனவே வாமனனிடம், எதைப் பிரார்த்தித்தாலும், எந்த சிறு கைங்கரியம் செய்தாலும், அந்தப் புண்ணியமானது, திரிவிக்கிரம அவதாரம் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துப் பலன் தரும்.சேவிப்போம்தசாவதாரங்களுள் வாமன அவதாரம் குருவுக்கு உகந்த அவதாரம் என்று சொல்கிறார்கள். காரணம், எதிரே மகாபலி சக்கரவர்த்தியின் குரு சுக்கிராச்சாரியார் இருந்தார். அவருக்குத் தான் “குரு” என்ற அகந்தை இருந்தது. வாமனரைக் கண்டுகொள்ளாமல் அவமதித்தார். “தானம் தராதே” என்று தடுத்தார். அந்த அகந்தையை பகவான் அழித்தார். குருவாகிய சுக்கிரனின் வார்த்தையைக் கேளாது, பலிச்சக்கரவர்த்தி ‘‘தான் பகவானுக்கே தருகிறோம்” என்கின்ற அகந்தையோடு தானம் தந்தான். அந்த அகந்தையையும் பகவான் அழித்தார். எனவே, இந்த வாமன திரிவிக்கிரம அவதாரங்கள் நவகிரகங்களில் குருவுக்கு உரிய அவதார விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் மிருகண்டு முனிவருக்கு காட்சி தந்த திருத்தலம் திருக்கோவிலூர். அங்கே உலகளந்த பெருமாள் சந்நதிக்குப் பக்கத்தில் வாமன சந்நதி இருக்கிறது. திருஉண்ணாழிச் சுற்றில் இருக்கும் இந்தச் சந்நதியை வாமன ஜெயந்தி என்று அவசியம் சேவிக்க வேண்டும். விருட்சம் கண்ணுக்குத் தெரியும். விதை கண்ணுக்குத் தெரியாது. உலகளந்த பெருமாள் கோயிலில் விருட்சமாக ஓங்கி வளர்ந்த பெருமாள் ஆஜானு பாகுவாக நமக்குத் தெரிவார். ஆனால், அதற்கு விதையான வாமன அவதாரம் திருச்சுற்றின் பின்பகுதியில் இருக்கும். அந்த மூர்த்தியை சேவிக்க வேண்டும். மூன்றாவது அடிக்கு மண் கேட்டபொழுது தலைகுனிந்து நின்றான் மகாபலி சக்கரவர்த்தி. அவனால் திரிவிக்கிரம அவதாரத்தை கண்டு ரசிக்க முடியவில்லை. அவனுடைய ஏக்கம் தீர, மறுபடியும் திரிவிக்கிரம அவதாரத்தை உலகளந்த பெருமாளாகக் காட்டினார். அப்படி காட்டிய இடம்தான் காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில். அங்கேயும் வாமன ஜெயந்தியன்று பெருமாளைச் சேவிப்போம்.தொகுப்பு: பாரதிநாதன்

You may also like

Leave a Comment

19 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi