ஒரே வாகனத்தில் 5 பேர் சென்றதால் விபரீதம் மொபட் மீது லாரி மோதி தாய், மகன் உள்பட 3 பேர் பலி-சிறுவன் உள்பட 2 பேர் கவலைக்கிடம்

திட்டக்குடி :  திட்டக்குடி அருகே மொபட் மீது லாரி மோதியதில் தாய், மகன் உட்பட மூன்று பேர் பலியாகினர். சிறுவன் உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா கஞ்சமலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள் மகன் கோபி (22). அதே கிராமத்தை சேர்ந்தவர் அருள் மனைவி செல்வி (45), அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா இருங்களாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா மனைவி சமத்துவம் (45), அதே கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் வெற்றிவேல் (12), ராதா மகன் ராஜ்குமார் (14) ஆகியோர் நேற்று காலை கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள நெய்வாசல் கிராமத்தில் உள்ள பூமாலையப்பர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர். சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் சொந்த ஊர் செல்வதற்காக ஒரு மொபட்டில் இவர்கள் ஐந்து பேரும் சென்றுள்ளனர்.   கொடிகளம் பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம்- திருச்சி மாநில நெடுஞ்சாலையை கடந்துள்ளனர். அப்போது பெண்ணாடத்தில் இருந்து அரியலூர் நோக்கி சென்ற டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் மொபட்டை ஓட்டி வந்த கோபி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் மொபட்டில் வந்த சமத்துவம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். படுகாயம் அடைந்த செல்வி, சிறுவர்கள் ராஜ்குமார், வெற்றிவேல் ஆகியோருக்கு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் மூவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.   இதில் திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். செல்வி, வெற்றிவேல் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்கள் அனைவரும் அடுப்பு கரி எடுக்கும் தொழில் செய்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லாரியை ஓட்டி வந்த மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பன்னீர்கோட்டம் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (59) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திட்டக்குடி டிஎஸ்பி காவியா விசாரணை மேற்கொண்டார்.  இதுகுறித்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திட்டக்குடி அருகே சாலை விபத்தில் சாமி கும்பிட வந்த சிறுவன் உட்பட மூன்று பேர் பலியானது மற்றும் சிறுவன் உட்பட இரண்டு பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்லக் கூடாது, 2க்கும் மேற்பட்ட நபர்கள் பயணிக்க கூடாது என்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வினை போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர். இருந்தபோதும், சிலர் அவற்றை சிறிதும் கூட கண்டுகொள்ளாமல் இதுபோன்ற விபரீத பயணம் மேற்கொள்வதால் விபத்து சம்பவங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக சமூகஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.  …

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்