ஒரு வார சோதனையில் குட்கா விற்ற 146 பேர் கைது; 280 கிலோ புகையிலை பறிமுதல்

சென்னை: சென்னை முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக 146 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 280 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை முழுவதும் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 3ம் தேதி வரை 9ம் தேதி வரை சென்னை முழுவதும் 12 காவல் மாவட்டங்களில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 143 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 146 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 280 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், பணம், பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, கொத்தவால்சாவடி நாராயண முதலி தெருவில் போலீசார் கண்காணித்த போது, ஒரு கிடங்கில் அரசால் தடை செய்யப்பட்ட 247 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த ஏழுகிணறு நம்புலியர் தெருவை சேர்ந்த ஈஸ்வர் சிங் (26), பரத்சிங் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், கோயம்பேடு மேட்டுக்குப்பம் காமராஜர் சாலையில் கடையில் சட்டவிரோதமாக விற்பனை செய்த ஆழ்வார் திருநகர் மீனாட்சியம்மன் நகரை சேர்ந்த பவன்குமார் யாதவ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5.8 குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த அதிரடி சோதனை தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு