ஒரு லட்சத்திற்கு 10 முதல் 25 சதவீதம் வட்டி தருவதாக தமிழகம் முழுவதும் 2.13 லட்சம் பேரிடம் ரூ.9 ஆயிரம் கோடி மெகா மோசடி

* தலைமறைவான ஆரூத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவ் நிதி நிறுவனங்களில் 10 உரிமையாளர்களை பிடிக்க தனிப்படை அமைப்பு* பொதுமக்கள் துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவிப்புசென்னை: தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆரூத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட், எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் ஹிஜாவ் அசோசியேட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிதி நிறுவனங்கள் மிக முக்கியமானவை ஆகும். இந்த நிறுவனங்கள் பொதுமக்களிடம்  பெறப்படும் முதலீடுகளுக்கு மாத வட்டியாக 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளன. அதில், ஆரூத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார்கள் வரப்பெற்று அதன் அடிப்படையில் கடந்த 20.5.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கு விசாரணை சம்பந்தமாக கடந்த 24.5.2022 அன்று சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் என 37 இடங்களில் ஆரூத்ரா நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்கள் சோதனை நடத்தப்பட்டது. இதுவரை திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் சுமார் 1 லட்சத்து 9 ஆயிரத்து 255 பேர் இந்நிறுவனத்தில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன் மொத்த தொகை சுமார் ரூ.2,438 கோடி என தெரியவருகிறது. இந்த வழக்கில் 8 குற்றவாளிகளில் பாஸ்கர், மோகன்பாபு, பட்டாபிராம் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள முக்கிய குற்றவாளிகளான சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜசேகர், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஷ், விருதுநகர் முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த மைக்கேல் ராஜ், சென்னையை சேர்ந்த நாராயணி ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர். அதேபோல், எல்என்எஸ் இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்வீஸ் என்ற நிதி நிறுவனம் சம்பந்தமாக பொருளாதார குற்றப்பிரிவுக்கு வந்த புகாரின் படி கடந்த 4.8.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்விசாரணை தொடர்பாக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப் பேட்டை, ஈரோடு, கோவை என 21 இடங்களில் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 6.8.2022 அன்று சோதனை நடத்தப்பட்டது. அதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் இந் நிறுவனங்களில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன் மொத்த தொகை சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேலாக இருக்கும் எனவும் தெரியவருகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முக்கிய குற்றவாளிகளிகளான வேலூரை சேர்ந்த லட்சுமிநாராயணன்(36), வேதநாராயணா(38), ஜனார்த்தனன்(39), மோகன்பாபு(34) ஆகியோரை தேடி வருகின்றனர்.  மேலும், ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் மீது அளிக்கப்பட்ட புகாரின் படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்த 21.11.2022 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 21ம் தேதி இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் வீடுகள், அலுவலகங்கள் என 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் சுமார் 4,500 பேர் இந்நிறுவனத்தில் முதலீடுகள் செய்துள்ளதும், அதன்  மொத்த தொகை சுமார் ரூ.600 கோடி எனவும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான நேரு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள முக்கிய குற்றவாளியான காஞ்சிபுரம் வண்டலூர் பெருங்களத்தூர் பாரதி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர், சவுந்தரராஜன் ஆகியோரை தேடி வருகின்றனர். ஆரூத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவ் ஆகிய 3 நிதி நிறுவனங்கள் 2 லட்சத்து 13 ஆயிரத்து 755 பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி மொத்தம் ரூ.9,038 கோடி பணத்தை மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்.எனவே இந்த 3 வழக்கில் தலைமறைவாக உள்ள 10 மோசடி நபர்கள் குறித்து தகவல்கள் ஏதேனும் இருப்பின் பொதுமக்கள் அவற்றின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு கணிவுடன் வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உறுதியான தகவல்களாக இருப்பின் தக்க சன்மானம் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படும். தகவல் கொடுப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். நேரிலோ அல்லது தொலை பேசி மூலமோ தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி, காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம், காவலர் பயிற்சி கல்லூரி, அசோக் நகர், சென்னை 83, தொலை பேசி எண்: 044-22504311 மற்றும் 044-22504332 ஆகிய எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

Related posts

மகாராஷ்டிரா, குஜராத் கால்சென்டர்களில் சிபிஐ சோதனை: 26 சைபர் குற்றவாளிகள் கைது

பட்டாசு விபத்துக்கு பாதுகாப்பு வசதி இல்லாததே காரணம்: நீதிபதிகள் வேதனை

புதையலில் கிடைத்ததாக கூறி போலி தங்க நாணயம் விற்று மோசடி அதிமுக நிர்வாகி உட்பட 6 பேர் கைது