ஒரு பெண்ணுக்காக 2 பேர் போட்டியால் விபரீதம் திருமங்கலத்தில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு: கூலிப்படையை ஏவிய விஐபி?

சென்னை: ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டியிட்டதால் ஏற்பட்ட மோதலில் விஐபி ஒருவர், பைக் மெக்கானிக் கடை நடத்துபவரை சரமாரியாக வெட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூலிப்படையை ஏவி இந்தச் சம்பவத்தை நடத்தியதால் புதிய பரபரப்பு எழுந்துள்ளது. சென்னை அண்ணாநகரில் பைக் மெக்கானிக் கடையை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வருகிறார். இவர் விஐபிக்கள் பயன்படுத்தும் பைக்கை பழுது பார்க்கும் பணியை செய்கிறார். இதனால் இவரது கடைக்கு விஐபிக்கள் குறிப்பாக இளைஞர்கள் வருவது வழக்கம். அதேபோல, இவருக்கும் அதிமுகவை ஆட்டிப் படைத்து வந்த ஒரு பெண் விஐபியின் உறவினர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த உறவினர்தான் தனியார் டிவியையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருவருக்கும் நட்பு ஏற்பட்டதால் அடிக்கடி சந்தித்து வந்தனர்.இந்தநிலையில்தான், மெக்கானிக் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர், மெக்கானிக்கின் தோழியுடன், விஐபியின் உறவினர் நெருக்கமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் மெக்கானிக்கிற்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தன்னுடன் நெருக்கமாக பழகிய நண்பர், தன் தோழியையே மயக்கி தனக்கு எதிராக மாற்றிவிட்டார் என்று மனவேதனையும் அடைந்தார். இதற்கிடையில் விஐபியின் உறவினரும், தன்னுடைய தோழியும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மெக்கானிக்கிற்கு கிடைத்தது.அந்தப் படத்தை பெண் விஐபியின் மற்றொரு உறவினராக கொட்டிவாக்கத்தில் வசிக்கும் டாக்டர் ஒருவருக்கு அனுப்பி வைத்து புகார் செய்துள்ளார். சர்ச்சைக்குள்ளானவரின் மகளை காதல் திருமணம் செய்தவர், இப்போது வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுவதை கேள்விப்பட்ட டாக்டரும், விஐபியின் உறவினரை கண்டித்துள்ளார். தனது கள்ளக்காதல் விவகாரத்தை வீடு வரை தெரிய வைத்து விட்டாரே என்று மெக்கானிக் மீது விஐபி கடுமையான கோபத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில்தான் இரு நாட்களுக்கு முன் மெக்கானிக் கடையில் இருந்தபோது மாலை 6.30 மணிக்கு 3 பேர் பைக்கில் வந்துள்ளனர். பைக்கை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு வந்து, கடைக்குள் இருந்தவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர். படுகாயமடைந்த மெக்கானிக், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத 3 பேர் வந்து தன்னை வெட்டி விட்டதாக புகார் செய்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஐபியுடன் மோதல் இருந்தநிலையில் மெக்கானிக் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஐபிதான் கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தினாரா என்ற பரப்பும் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது….

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

கடன் வழங்கும் திட்டத்தில் மானியத் தொகையை விடுவிக்க லஞ்சம் வாங்கிய தொழில் மைய அலுவலக உதவியாளர் கைது: 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

ஆவடி அருகே ரூ.1.40 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணம் தயாரித்து விற்றவர் கைது