ஒருவருக்கு ஒரு பதவி திரிணாமுல் காங்கிரசில் வெடித்தது உட்பூசல்: இளைய தலைமுறை – பழைய தலைமுறை மோதல்

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரசில் இளைய தலைமுறைக்கும், பழைய தலைமுறைக்கும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சியின் செயற்குழுவுக்கு 20 புதிய உறுப்பினர்களை மம்த பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில், சமீப காலமாக உட்கட்சி பூசல் அதிகமாகி இருக்கிறது. மம்தாவின் மருமகனான அபிஷேக் பானர்ஜி, இளைய தலைமுறை தலைவர்களை ஊக்குவித்து வருகிறார். மேலும், ‘ஒரு நபர்; ஒரு பதவி’ என்ற முழக்கத்தை இந்த இளைய தலைமுறை தலைவர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தி வருகின்றனர். கட்சியில் உள்ள பழைய தலைமுறை தலைவர்களுக்கு இது அதிருப்தியை அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், கட்சியில் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. மம்தாவுக்கு இது கவலை அளித்துள்ளது. இதனால், இந்த உட்கட்சி மோதலுக்கு முடிவு கட்டவும், கட்சியை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவராக மம்தா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கட்சிக்கு 20 பேர் கொண்ட புதிய செயற்குழுவை அவர் நேற்று அறிவித்தார். இதில், அபிஷேக் பானர்ஜி, சுதீப் பாந்தோபத்யாய், யஸ்வந்த் சின்கா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.இது  குறித்து கட்சியின் மூத்த தலைவரான பார்தா சாட்டர்ஜி அளித்த பேட்டியில், ‘‘கட்சித் தலைவராக மம்தா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கட்சியின் நிர்வாகத்தை கவனிக்க சிறிய கமிட்டியை அமைத்தார். இன்று அதன் கூட்டம் நடந்தது. இதில், புதிய செயற்குழு உறுப்பினர்களை மம்தா அறிவித்தார்,’’ என்றார். பெயர் கூற விரும்பாத மற்றொரு மூத்த தலைவர் கூறுகையில், ‘புதிய நிர்வாகிகளை மம்தா அறிவிக்கும் வரையில், கட்சியின் அனைத்து பதவிகளும் கலைக்கப்படும்,’ என தெரிவித்தார். மம்தாவின் தலைமையில் கட்டுக்கோப்பாக செயல்பட்டு வந்த திரிணாமுல்லில், பூசல் வெடித்திருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது….

Related posts

தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்