Tuesday, September 17, 2024
Home » ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கலக்கும் தஞ்சாவூர் உழவர்

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கலக்கும் தஞ்சாவூர் உழவர்

by kannappan

செலவு போக 1.40 லட்சம் வருவாய்ஒருங்கிணைந்த பண்ணையத்தில் பல ஆண்டுகளாக வெற்றிவாகை சூடி ஊடு பயிராக தஞ்சாவூரில் யாரும் முயற்சிக்காத கோக்கோ பயிரிட்டு அதிலும் நல்ல மகசூல் கண்டு விவசாயிக்கு வீழ்ச்சியில்லை என்பதை நிரூபித்துள்ளார் நடுவூர் செல்வராஜ், 8ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம் செய்து மாதம் ₹1.40 லட்சம் வரை வருமானத்தை ஈட்டுகிறார். ‘‘ஆடு, மாடு, கோழி, பங்களா வாத்து, நெல் சாகுபடி, பாமாயில் குலை அறுவடை, கோக்கோ சாகுபடி, வாழை, இளநீர், தேங்காய், கொப்பரைக்காய் என்று ஒன்றிலிருந்து ஒன்று, மற்றொன்றிலிருந்து இன்னொன்று என வருமானம் எடுத்துக் கொண்டே இருக்கலாம். யாரிடமும் கையேந்தி நிற்காமல் எனக்கும், என் குடும்பத்திற்கும் பெரும் வருமானத்தை அள்ளித்தருகிறது ஒருங்கிணைந்த பண்ணையம் என்பதுதான் உண்மைங்க. இப்போ பார்த்தீங்கன்னா, நெல் மட்டும் சாகுபடி செய்தா போதும்ன்னு நினைச்சா 2 போகம் போடலாம். இல்லை மழை நல்லா பெய்தா முப்போகம் போடலாம். அறுவடை முடிச்சு நெல்லை வித்து கைக்கு காசு வந்தாலும் லாபம்ன்னு பார்த்தா குறைவாகதான் இருக்கும். அப்போ மாத குடும்பச்செலவுக்கு என்ன செய்யறது. இதை யோசிச்சதால்தான் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் இறங்கினேன். இன்னைக்கு மாத வருமானம் கை நிறைய கிடைக்குது. மனசும் நிறையுது. வெள்ளாடு வாங்கி வளர்ப்பேன். ரம்ஜான் நேரத்தில விற்பனை செய்வேன். கோழிகள் இப்போ 50 நிக்குது. முட்டையிலும் வருமானம். அடைகாக்க விட்டு குஞ்சு பொரிக்க விட்டா இரட்டை லாபம். விசேஷ நாளுல கோழிகளையும் விற்பனை செய்து லாபம் பார்த்துவிடுவேன். நாட்டுக்கோழி என்பதால் தேடி வந்து வாங்கிட்டு போறாங்க.இப்போ எட்டரை ஏக்கரில் பாமாயில் எண்ணெய் மரம் சாகுபடி செய்து இருக்கேன். இதுல ஊடு பயிரா தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கோக்கோ கன்று கொடுத்தாங்க. மானியமும் கொடுத்தாங்க. தொடர்ந்து ஆலோசனையும் அளித்தாங்க. இதேபோல் கால்நடைத்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் அடிக்கடி வந்து தோட்டத்திற்கு வந்து பார்வையிட்டு ஆலோசனை அளிப்பாங்க. ஒருங்கிணைந்த பண்ணையத்திற்காக எனக்கு விருதும் கொடுத்தாங்க. கோக்கோ செடிகள் மூன்று வருஷம் வளர்ந்த பின்னாடி அறுவடை செய்யலாம். இப்போ 300 கன்று நல்லா வளர்ந்து இருக்கு. உரச்செலவும் அதிகம் இல்லை. ஊடு பயிர்தான். கோக்கோ கன்றுக்கு 60 சதவீதம் நிழல் வேண்டும். பாமாயில் எண்ணெய் மரத்துக்கு ஊடாக இதை சாகுபடி செய்து இருக்கிறதுனால கோக்கோ செடி நல்லா வளர்ந்து நிக்குது. இப்போ அறுவடை செய்ய ஆரம்பிச்சுட்டேன். ஒரு செடியில் இருந்து வருசத்துக்கு ஒரு கிலோ கிடைச்சாலும் 300 செடியில இருந்து 300 கிலோ வரும். அப்படி பார்த்தா கிலோ ₹150ல இருந்து ₹200 வரைக்கும் வாங்கிக்கிறாங்க. இது தனி லாபம்தானே. ஊடுபயிராகத்தானே இதை வளர்த்துக்கிட்டு இருக்கேன். இது மட்டும் இல்லாம வாழை மரங்களும் சாகுபடி செய்திருக்கேன். அதிகமாக இல்லாட்டிலும் இதுவும் எனக்கு வருமானத்தை கொடுக்கிறது. மொந்தன், பூவன், ரஸ்தாலி, கற்பூரவல்லி வாழைக்கன்றுகள் போட்டு இருக்கேன். இது ஒரு பக்கம்ன்னா கிடாரங்காய், எலுமிச்சை, பலா, தென்னை வளர்த்து அதிலும் வருமானம். பல்லாண்டு பயிர்களான நீர் மருது, கரு மருது வளர்ந்து நிக்குது. இதை வித்தா தனி வருமானம். இதுக்குன்னு நான் தனியா உரமோ, செலவோ செய்யவே இல்லை. சொன்னா நம்ப மாட்டீங்க. இடையில கஜா புயலால பெருத்த நஷ்டம். அப்போ கை கொடுத்தது பாமாயில் எண்ணெய் மரங்கள்தான். பாமாயில் எண்ணெய் மரக் குலைகளை கொள்முதல் செய்யும் கோத்ரெஜ் நிறுவனத்தின் அதிகாரிகள் அடிக்கடி வந்து தொழில்நுட்பங்களை சொல்லி எண்ணெய் மரக்  குலைகளில் அதிக வருமானம் எடுக்க உதவியா இருக்காங்க. இயற்கை ஒரு பக்கம் சரிச்சாலும், மண் மறுபக்கம் கை கொடுத்து தூக்கிவிடும். கடந்த 3 வருசத்துக்கு முன்னாடி விபத்துல சிக்கிட்டேன். அவ்வளவுதான் முடிஞ்சுச்சுன்னு நினைச்சாங்க. ஆனால் இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்துல கிடைச்ச வருமானம் தான் என் மருத்துவ செலவுகளுக்கும், குடும்பத்திற்கும் பேருதவியா இருந்துச்சு. பாமாயில் எண்ணெய் மரங்களுக்கு மத்தியில ஊடு பயிரா பாக்கு மரமும் வளர்க்கிறேன். வாழை உட்பட பிற சாகுபடிப் பயிர்களுக்கு இயற்கை உரம்தான். இதுக்காகவே கிர், ஜெர்ஸி. நாட்டு மாடுகள் வளர்க்கிறேன். இவற்றின் சாணம், கோமியம்தான் இயற்கை உரமாக மாற்றி சாகுபடி பயிர்களுக்கு போடறேன். பாலில் இருந்து கிடைக்கும் வருமானம் தனி. இது மட்டுமில்லாம பங்களா வாத்து 11 வளர்க்கிறேன். இதுங்க முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இதை ஜோடி ₹4 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறேன். இதுங்க பாசக்கார பசங்க… சொன்னா சொன்ன பேச்சை கேட்கும். இதுங்களோட ஒற்றுமை, பாசம் நம்மள நெகிழ வைத்துவிடும். காலையில எழுந்து சாகுபடிப் பயிர்களை பார்த்து களை எடுக்கிறது உட்பட பணிகளை முடிச்சு வந்து உட்கார்ந்து பங்களா வாத்துக்களுக்கு உணவு போட்டா ஆஹா அதுங்க நம் கையில இருக்கிற உணவை அழகா கொத்தி சாப்பிடும் பாருங்க. உழைச்ச களைப்பு பறந்து போயிடும்.இரண்டு ஏக்கரில் நெல் சாகுபடியும் செய்யறேன். வீட்டுத் தேவைக்குப் போக மற்றதை விற்பனை செய்துவிடுவேன். அது தனி. இப்படி சரியான முறையில் உழைப்பை கொடுத்தா ஒருங்கிணைந்த பண்ணையம் என்னைக்கும் வெற்றிதாங்க. பங்களா வாத்து குஞ்சு பொரிச்சு இருக்கு. விலைக்கு கேட்கிறாங்க. கொஞ்சம் வளர்ந்த பின்னாடி இன்னும் நல்ல விலைக்கு விற்பனை செய்திடுவேன்.இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்துல பாமாயில் எண்ணெய் மரங்களில் இருந்து செம வருமானம் கிடைக்குது. மாதத்துக்கு மூன்று முறை குலைகள் அறுவடை செய்கிறேன். கொள்முதல் செஞ்சுக்கிட்டு உடனே பணம் வந்திடுது. இதோட கோக்கோ, பாக்கு, ஊடுபயிர் என்பதால் பெரிசா செலவு கிடையாது. நல்ல வருமானம்தான்.தென்னை மரத்தில் இருந்து இளநீர் அறுக்க விடுவேன். ஒரு இளநீர் ₹12க்கு எடுத்துக்கிட்டு போவாங்க. அப்புறமா தேங்காயா பறிப்போம். கொப்பரைக்காயை எடுத்து அதுவும் விற்பனைக்கும், வீட்டுத் தேவைக்கு தேங்காய் எண்ணெயாகவும் எடுத்திடுவோம். இப்படி ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி மாத்தி யோசிச்சா மாத வருமானம் அள்ளலாம். முடியாதுன்னு நினைக்காம முயற்சி செய்து பார்த்தா வெற்றிதாங்க. விபத்துல சிக்கினதுக்கு அப்புறமா வீழ்ந்து விடுவேன் என்று நினைச்சேன். ஆனால் விவசாயம் என்னை எழுந்து நிற்க வைச்சு நல்லா வாழ வச்சுக்கிட்டு இருக்கு. எனக்கு உறுதுணையாக என் மனைவி இந்திராகாந்தி, மகன்கள் அறிவுச்செல்வன், தமிழ்ச்செல்வன் ஒருங்கிணைந்த பண்ணையத்தை பாத்துக்கிறாங்க. அறிவுச்செல்வன் பி.ஏ., முடிச்சுட்டாரு. தமிழ்ச்செல்வன் பி.சி.ஏ., படிச்சுக்கிட்டு இருக்காரு. இவங்க மூன்று பேரும் எனக்கு அஸ்திவாரமாக இருக்காங்க.தேவை இருக்கும் வரை தேடல் முடிவதில்லை. நம்பிக்கை இருக்கும் வரை வாழ்க்கை சலிப்பதில்லை. விவசாயத்துக்கான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறுகிக்கொண்டே வருகிறது. எனவே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் பொருட்டு முற்றிலும் ஒரு புதிய அணுகு முறை தேவைப்படுது. இந்த புதிய அணுகுமுறையே ஒருங்கிணைந்த பண்ணையமாகும். ஒரு உப தொழிலிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருள்களை மற்றொரு உபதொழிலுக்கு இடுபொருளாக இருக்குமாறு உபதொழில்களைத் தேர்ந்து எடுக்க வேண்டும். இப்போ மாட்டுச்சாணம், கோமியம் இயற்கை உரமாகவும், கோழி, ஆட்டுக்கழிவுகள் எருவாகவும் கிடைக்குது. இதனால நமக்கு லாபம்தான்.விவசாயிக்கு வருமானம் என்பது பல வகைகளில் இருக்கவேண்டும். தினசரி, வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, வருடம் ஒருமுறை, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை என ஆறு வகைகளில் வருமானங்கள் வரவேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மழை இல்லாமல் போனாலோ அல்லது பயிர் பொய்த்து போனாலோ நஷ்டம் ஏற்படாமல் ஒருங்கிணைந்த பண்ணையம் கை கொடுக்கும். தினசரி வருமானத்திற்கு மாடுவளர்ப்பு, வாரம் ஒருமுறை கோழி முட்டைகள் என்று சரியானபடி வருமானம் பார்க்கலாம். ஒருங்கிணைந்த பண்ணையத்துனால எனக்கு மாத வருமானமா எல்லா செலவுகளும் போனாலும் ரூ.1.40 லட்சம் வருமானம் கிடைக்குது. இது எப்படி கூடி, குறைந்தாலும் எனக்கு லாபம்தான். ஒன்றைச் சார்ந்து ஒன்று என்று கோக்கோ, பாமாயில் எண்ணெய் மரக் குலைகள் அதிக வருமானம் கொடுத்தா, மாடு, கோழி, வாத்து தினசரி வருமானத்துக்கு வழிகாட்டுது. ஒவ்வொரு விவசாயிக்கும் விவசாயம் சார்ந்த ஏதோ ஒரு தொழில் இருக்கவேண்டும். அப்போதான் நிலையான, அதிக வருமானம் பார்க்க முடியும். ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதில் திட்டமிடுதல் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை சரியானபடி செய்துட்டா விராட் கோலி அடிக்கிற சிக்சர் மாதிரி வருமானத்தை சொல்லியடிக்கலாம். உழைப்புங்கிறது செடி போல இல்லாம மரம் போல இருந்தால் நிலைச்சு நிற்கும். மண்ணை நம்புறவங்க என்னைக்கும் ஏமாற மாட்டாங்க, இவ்வாறு அவர் தெரிவித்தார்.தொடர்புக்கு: சி.செல்வராஜ்: 97514 02332.தொகுப்பு: என்.நாகராஜன்  படங்கள்: எஸ்.சுந்தர்

You may also like

Leave a Comment

two + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi