ஒரத்தநாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழுநோய் பரிசோதனை

ஒரத்தநாடு : ஒரத்தநாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தீவிர தொழுநோய் பரிசோதனை நடந்தது.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாவட்ட கலெக்டர் அறிவுரைப்படி, பள்ளி மாணவர்களுக்கு தீவிர தொழுநோய் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக, கொரோனா நோய் தொற்று காரணமாக, பள்ளிக்கூடங்கள் முழுமையாக நடைபெறாத காரணத்தால், பள்ளி மாணவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய இயலவில்லை. தற்போது அனைத்து பள்ளிகளும் முழுமையாக செயல்படுவதால், மாணவர்களுக்கான தொழுநோய் பரிசோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, ஒரத்தநாடு நகரில் உள்ள தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில், வட்டார மருத்துவ அலுவலர் இந்திரா வழிகாட்டுதல்படி, மாவட்ட தொழுநோய் துணை இயக்குநர் மருத்துவர் குணசீலன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பள்ளி மாணவர்களை ஆய்வு செய்து தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளியில் பயிலும் 398 மாணவர்களை பரிசோதனை செய்ததில், 1 மாணவருக்கு புதிதாக ஆரம்ப நிலை தொழுநோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சையும் உடன் தொடங்கப்பட்டது.மாவட்ட தொழுநோய் துணை இயக்குநர் குணசீலன் கூறுகையில், ” தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி வரும் காலங்களில் தீவிர தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆரம்ப நிலையிலேயே தொழுநோய் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அவர்கள் ஊனம் அடைவது தடுக்கப் படுவதுடன், நோய் குறித்த விழிப்புணர்வும் ஏற்படும். எனவே, உணர்ச்சி அற்ற தேமல் முதலான ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்கள் தயங்காமல், தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி சிகிச்சை பெறலாம்.” என்றார்.முகாமில் தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர் தொழுநோய் அலுவலக அதிகாரிகள் நாகராஜ் , செல்வம் , இளந்திரையன், ஜெயக்குமார் ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர். வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சிவகுமார், தலைமை ஆசிரியை செல்வராணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு