ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை, ஜூலை 7: சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆலயம் காப்போம் அறக்கட்டளையின் சார்பில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சென்னை ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலையில் ரத்தின விநாயகர் மற்றும் துர்கை அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்காக இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, மெட்ரோ ரயில் திட்டத்தை மாற்றி அமைக்க கோரி மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநரிடமும், தமிழக அரசுக்கும் கடந்த ஜூன் 14ம் தேதி மனு கொடுத்தோம். எங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, பதிலும் தரப்படவில்லை. எனவே, மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மெட்ரோ நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை. கோயிலுக்கு முன்பு மெட்ரோ ரயில் நுழைவாயில் அமைக்கப்பட உள்ளது. கோயில் ராஜகோபுரத்துக்கும், அம்மன் சன்னதிக்கும் 33 அடி இடைவெளி உள்ளது. அதில், 10 அடிக்கு கோயில் ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் நகர்த்தி வைக்க உள்ளோம் என்று தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, வழக்கறிஞர் எம்.ராமமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, அவ்வாறு நகர்த்தி வைத்தால் உற்சவ காலங்களில் சாமி உலா வருவதில் இடையூறு ஏற்படும் என்று வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள், நுழைவாயிலை கோயிலுக்கு அருகே உள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பாகவோ, அல்லது எதிர்புறமோ மாற்றினால் என்ன என்று கேள்வி எழுப்பியதுடன், இதுகுறித்து மெட்ரோ ரயில் தொழில்நுட்ப நிபுணர்கள் குழு ஆய்வு செய்து, வரும் 9ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’