ஒப்பந்த நிறுவனத்துடன் பிரச்னை ஓஎம்ஆர் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தாமதம்

 

சென்னை, ஜன.28: ஒப்பந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஓஎம்ஆர் பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது விம்கோ நகர் – விமான நிலையம், சென்ட்ரல் – விமான நிலையம் ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போது மாதவரம்-சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் – சோழிங்கநல்லூர் ஆகிய வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 119 கி.மீ. தூரத்துக்கு இந்த பணிகள் தொடங்கியுள்ளன. இதில் மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையே உள்ள 45.4 கி.மீ. தூரத்தில், தரமணி – சிறுசேரி சிப்காட் வரையில், தரமணி – சோழிங்கநல்லூர் இடையே மெட்ரோ ரயில் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு, தற்போது அங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ராஜிவ்காந்தி (ஓஎம்ஆர்) சாலையில் உள்ள சோழிங்கநல்லூர் – சிறுசேரி சிப்காட் வரையிலான 10 கி.மீ. தூரத்துக்கு உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இந்த இடைப்பட்ட பகுதிகளில் 9 ரயில் நிலையங்கள் வர உள்ளன. இந்த பணிகளை மேற்கொள்ள ரயில்வே அமைச்சகத்தின் கட்டுமான பிரிவான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்துடன், வேறொரு நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டு இருந்தது. ஆனால் தற்போது அந்த நிறுவனம் இதுவரை பணிகளை தொடங்கவில்லை. அதற்கான ஒப்பந்தத்தில் சிக்கல்களும் நீடித்தன. இதனால் அந்த ஒப்பந்தத்தை நிறுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்தது.

அதன்படி, அந்த ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு, தற்போது புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது என்றும், அந்த நிறுவனம் இம்மாத இறுதியில் இருந்து பணிகளை தொடங்க இருக்கிறது என்றும், பணிகளை முடிப்பதில் எந்த தாமதமும் ஏற்படாது என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர். மெட்ரோ ரயில் திட்டத்துக்கான பணிகள் தாமதமாவதால், பழைய மாமல்லபுரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து அந்த பகுதி குடியிருப்பாளர்களும், அந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் பணிக்காக ராஜிவ்சாந்தி சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், சாலை குறுகி உள்ளது. இதனால், அலுவலக நேரங்களில் நெரிசல் ஏற்பட்டு, வாகனங்களை ஓட்டுவதற்கு சிரமமாக உள்ளது. முக்கியமான சந்திப்புகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. எனவே, மந்தகதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே திராவிட இயக்க வரலாற்று சாதனைகள் கலை நிகழ்ச்சி

ராஜபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

ரூ.2.05 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்