ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்துவதில் தகராறு வடமாநில வாலிபர் கொலை வழக்கில் ஊராட்சி தலைவரின் மகன் சிக்கினார்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஏராளமானோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களில் ஊழியர்களை பணியமர்த்துவதில் 6 ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்கிடையில், சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ஒப்பந்தம் செய்து அதிக அளவில் வடமாநில வாலிபர்களை பணியமர்த்தி வந்துள்ளார். இதற்கு கீழச்சேரி பகுதியை சேர்ந்த முத்தீஷ் மற்றும் பிரபு ஆகிய இருவரும் கூடுதலாக தங்களுக்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தொழிற்சாலையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஓர் ஆண்டுக்கு பிறகு தருவதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் மற்றும் பிரபு ஆகியோர் தனது கூட்டாளிகளுடன் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி வடமாநில வாலிபர்கள் தங்கி உள்ள பேரம்பாக்கம் பகுதிக்கு சென்று அவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் அப்துல் அசின் என்ற வடமாநில இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கொலை வழக்கில் தொடர்புடைய முத்தீஷ்(27), பிரபு(33), தினேஷ்(29), சிமியோன்(21), திவாகர்(25), ராஜேஷ்(29), தினேஷ்(24), சூர்யா(29), முகேஷ்(24), பிரகாஷ்(19) ஸ்டீபன்(29) ஆகிய 11 பேரையும் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.மேலும், வடமாநில வாலிபர்களை அடித்து துரத்தி விட்டால் மொத்த பணியாளர்களையும் நம்மலே வைத்துக்கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி வடமாநில வாலிபர்கள் தாக்க தூண்டிவிட்டதாக இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை மப்பேடு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக கீழச்சேரி ஊராட்சி தலைவர் தேவிகலா ஆரோக்கியசாமி மகன் தேவா (எ) தேவா ஆரோக்கியம்(25) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் மற்றொருவரை தேடிவருகின்றனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது