ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மருத்துவர்களை நிரந்தரம் செய்ய கோரி வழக்கு: அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கொரோனா பேரலையின்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய மருத்துவர்களை, அரசின் நிரந்தர உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களாக நியமிக்கும் கோரிக்கையை 2 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் வெங்கட்ராமன், அருவி உள்ளிட்ட 11 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2018ல் நடந்த மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், கொரோனா தொற்று காலத்தின் மூன்று அலைகளிலும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த மருத்துவர்களாக பணியாற்றினோம். நிரந்தர பணி நியமனம் கோரி அரசுக்கு பலமுறை அளிக்கப்பட்ட மனு மீது எந்த பதிலும் அரசு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கசிவன், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கொரோனா நோய் தொற்றின்போது பணியாற்றிய மருத்துவர்களை உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்களாக நியமனம் செய்ய முன்னுரிமையை தமிழக அரசு வழங்கவில்லை. 100 நாட்கள் மருத்துவர்களாக பணியாற்றினால் அவர்களை முழுநேர மருத்துவர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, மனுதாரர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டனர். 2018ம் ஆண்டு மருத்துவ பணியாளர்  தேர்வு வாரிய தேர்வின் அடிப்படையில் நியமனம் செய்ய முடியாது என்றும் வாதிட்டார். இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கொரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்ததை கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்களாக பணி நியமனம் செய்யக் கோரி 2 வாரத்திற்குள் புதிய மனு அளிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார். அந்த மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்….

Related posts

விளையாட்டு மைதானத்தில் குப்பை, கட்டிட கழிவு கொட்டுவதற்கு எதிர்ப்பு: இளைஞர்கள் சாலை மறியல்

ஊராட்சி தலைவர் வீட்டில் கல்வீச்சு 20 பேர் மீது வழக்கு

பிளஸ் 2 படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்த போலி டாக்டர் கைது: சுகாதாரத்துறை நடவடிக்கை