ஒன்றிய பாஜ ஆட்சியிலும் எடப்பாடி ஆட்சியிலும் தான் நீட் தேர்வு திணிக்கப்பட்டது: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வு முடிவுக்கு எதிராக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 18 ஜூலை 2013ல் நீட் தேர்வுகளை ரத்து செய்தது.  ஆனால் உச்ச நீதிமன்றத்தில் 2013ல் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் 11 ஏப்ரல் 2016ல் சீராய்வு மனுத் தாக்கல் செய்தது. இதில் வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலமாக 2016 முதல் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. அப்போது மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் அதிமுகவும் தான் ஆட்சியிலிருந்தன. மீண்டும் நீட் தேர்வை தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாயமாக்குகிற வகையில் ஒன்றிய பாஜக அரசு மக்களவையில் 18 ஜூலை 2016ல் மசோதாவை நிறைவேற்றியது. இந்தியா முழுவதும் நீட் தேர்வைக் கட்டாயமாக்குகிற வகையில் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா, 2016 மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறுவதை எதிர்த்து அதிமுக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது ஏன்?. பாஜ அரசின் சட்டபூர்வமான நீட் திணிப்பை எதிர்த்து, மக்கள், மாநிலங்கள் அவையில்அதிமுகவுக்கு துணிவில்லாமல் போனது ஏன்.  எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மத்தியில் 2014ல் இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு திணிக்கப்படவில்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபிறகு தமிழகத்தில் 2017ல் எடப்பாடி ஆட்சியில் தான் நீட் தேர்வு முதல் முறையாகத் திணிக்கப்பட்டது என்பதை எவராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது….

Related posts

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கூட்டணி முறிகிறதா? அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் 8 பேர் திடீர் டெல்லி பயணம்

ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: திமுக சட்டத்துறை அறிவிப்பு