ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்

சென்னை: சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க  வேண்டும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைத்துறைக்கு தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் அனைத்து மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: சென்னை துறைமுகம் –  மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பால சாலைக்கு, மே மாதம் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்டது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை, சுமார் 64,000 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகளை பராமரித்து வருகிறது. தமிழகத்தில் சாலை வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டம் மற்றும் தாலுகா தலைமையகங்களை இணைக்கும் முக்கியமான மாநில நெடுஞ்சாலைகளை 2026ம் ஆண்டுக்குள் முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் போக்குவரத்து செறிவின் அடிப்படையில், சுமார் 2200 கி.மீ. தூர்த்திற்கு 4 வழிச்சாலையாகவும் மற்றும் 6700 கி.மீ. நீளத்திற்கு 2 வழிச்சாலையாகவும் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டில், தற்போதுள்ள 1280 தரைப்பாலங்களும், 2026ம் ஆண்டிற்குள், உயர்மட்ட பாலங்களாக மாற்றப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகராட்சிகளுக்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. சாலைப் பாதுகாப்பு செயலாக்கத்திற்காக சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விபத்தில்லா தமிழ்நாடு உருவாக்க, சாலை பாதுகாப்பு பொறியியல், குறித்த சிறப்பு தொடர் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, 335 பொறியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.அதிவேகமாக செல்லும் வாகனங்களை, கண்காணிக்க கிழக்கு கடற்கரை சாலையில், தானியங்கி வேக அமலாக்க அமைப்பு மற்றும் மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. சென்னை – கன்னியாகுமரி சாலையை ஆறு – எட்டு வழிச்சாலையாக மேம்படுத்துவது இன்றியமையாததாகின்றது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் மற்றும் தஞ்சாவூர் பெரியகோயில் ஆகிய இரண்டு கோயில்களும், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் ஆகும். இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைக்கான இணைப்புச் சாலைகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தி இரு வழித்தடச் சாலையாக, மேம்படுத்தப்படுகின்ற சாலைகள் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிலையை கணிசமாக அடையாததால், பொது மக்களிடையே போராட்டங்களும், எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  மாநாட்டில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின்கட்காரி, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்