ஒன்றிய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 528 பேர் கைது

கோவை, செப். 8: கோவை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் சிபிஐ(எம்) சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பிஎஸ்என்எல் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒன்றிய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்தனர். இதில் 60 பெண்கள் உள்பட 305 பேர் கைது செய்தனர். இருகூர் பகுதியில் பத்மநாபன் தலைமையிலும், சவரணம்பட்டி பகுதியில் 2 இடங்களிலும் என மாநகரில் மொத்தம் 4 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 179 பெண்கள் உள்பட மொத்தம் 528 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை