ஒன்றிய அரசு மெத்தனம்

ஒன்றிய அரசு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கி வருகிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வீடு இல்லாதோருக்கு வீடு கட்டி தருவதே இதன் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு  கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு சார்பில் ரூ.1.50 லட்சமும், மாநில அரசு சார்பில் 60 ஆயிரம் என மொத்தம் 2.10 லட்சம் மானியம் மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 7.19 லட்சம் வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 6.24 லட்சம் வீடுகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் 4.60 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.3548 கோடியை ஒன்றிய அரசு இதுவரை தராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் 1.64 லட்சம் வீடு கட்டும் பணிகளை முடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுதவிர 95 ஆயிரம் வீடுகள் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.  இதற்கிடையில் 11,485 கோடி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசு அறிவித்து இருந்தது. இதில் ரூ.7,937 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,548 கோடி விடுவிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதால் வீடு கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் நிதியை விடுவிக்க வலியுறுத்தியும், ஒன்றிய அரசு இழுத்தடிப்பு செய்து வருகிறது. இதனால் பிரதமரின் வீடு கட்டும் திட்டப்பயனாளிகளுக்கு நிலுவை தொகையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆரம்ப கட்ட நிலையிலேயே கட்டுமானப்பணிகள் நீண்ட மாதங்களாக நின்றுபோய் இருக்கிறது. சில பயனாளிகளின் விண்ணப்பம் ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ளது. இது குறித்து ஒன்றிய அரசின் வீட்டு வசதித்துறை அமைச்சகத்திடம் இருந்தும் முறையாக பதில் எதுவும் வரவில்லை. தமிழக ஆட்சி பொறுப்புக்கு திமுக வந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டது முதல் ஒன்றிய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. இருந்தும், மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள், நிதியுதவி உள்ளிட்ட பிரச்னைகளுக்காக ஒன்றிய அரசை  தமிழக முதல்வர் தொடர்ந்து கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத திட்டங்களை தமிழக அரசு எதிர்ப்பதால் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியுதவிகளை வேண்டுமென்றே காலதாமதம் செய்து ஓரவஞ்சனையோடு மெத்தனமாக நடந்து கொள்கிறது. கொள்கை விரோத போக்கை வளர்ச்சி திட்டங்களில் காட்டுவதை ஒன்றிய அரசு நிறுத்திக்கொண்டு நிலுவையில் உள்ள மாநில திட்டங்களுக்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. …

Related posts

குற்றம் குற்றமே..!

தங்கம் இனி தங்குமா?

போர் அபாயம்