ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் விசைத்தறி, கைத்தறிக்கு சலுகை இல்லாதது ஏமாற்றம்: ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் அதிருப்தி

சேலம்: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் விசைத்தறி, கைத்தறிக்கு எவ்வித சலுகையும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோவை,  திருப்பூர், ஈரோடு, விருதுநகர் உள்பட பத்து மாவட்டங்களில் விசைத்தறி தொழில் மிகவும் முக்கிய தொழிலாக உள்ளது. இத்தொழிலில் பல்லாயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகள் தமிழகத்தில் பல பகுதிகளுக்கும், இதைதவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி உள்பட பல பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, துபாய், இலங்கை, லண்டன் உள்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. நூல் விலை உயர்வை கண்டித்து கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் சேலம், திருப்பூர், நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் கைத்தறி, விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்திற்கு பிறகு நூல் விலை குறையும் என்று ஜவுளி உற்பத்தியை சார்ந்தவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நூல் விலை குறையாமல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஜவுளி தொழிலை சார்ந்துள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நூல் விலை குறைப்பு சம்பந்தமாக பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வெண்ணந்தூர் விசைத்தறி சங்க முன்னாள் பொருளாளர் சிங்காரம் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தியில் அதிகம் பேர் ஈடுப்பட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தியில் விசைத்தறியை  நம்பி ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், கைத்தறியை  நம்பி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் உள்ளனர். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு ஐந்து கோடி மதிப்பிலான ஜவுளி உற்பத்தி நடக்கிறது. சமீப காலமாக ஜவுளி தொழில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருகிறது. பருத்தியில் தயாராகும் 40 எண் நூல் 50 கிலோ கொண்ட ஒரு சிப்பம் கடந்த 4 மாதத்தில் மட்டும் சிப்பம் ₹15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு நெசவு தொழிலை புரட்டி போட்டியுள்ளது.இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஒன்றிய அரசு 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. அதில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவு தொழிலுக்கு எந்த விதமான சிறு சலுகையும் இல்லை. ஒன்றிய அரசு பட்ஜெட்டில் 11சதவீதமாக உள்ள பஞ்சு இறக்குமதி வரிக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்றும் எதிர்பார்த்தோம். மேலும் பருத்தி, வணிகத்தில் இருந்து விடுவிக்கப்படும் என்றும், பஞ்சு மற்றும் நூல் பதுக்குவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதனால் நூல் விலை குறைய வாய்ப்பு ஏற்படும் என்றும் கருதினோம். இதை எதிர்பார்த்து நெசவாளர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு சிங்காரம் கூறினார்.* தமிழகத்தில் சேலம், நாமக்கல், கோவை,  திருப்பூர், ஈரோடு, விருதுநகர் உள்பட பத்து மாவட்டங்களில் விசைத்தறி தொழில் மிகவும் முக்கிய தொழிலாக உள்ளது.* ஜவுளி உற்பத்தியில் விசைத்தறியை  நம்பி ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும், கைத்தறியை  நம்பி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் உள்ளனர். * ஒன்றிய அரசு பட்ஜெட்டில் 11சதவீதமாக உள்ள பஞ்சு இறக்குமதி வரிக்கு விலக்கு அளிக்கப்படும் என்றும், நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்றும் எதிர்பார்த்தோம். …

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை