ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்க முயற்சி குடியாத்தத்தில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி பாஜவுக்கு கூட்டணிகள் ஆதரவளிக்க வேண்டிய சூழல்

குடியாத்தம் ஜூன் 6: பாஜ தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக குடியாத்தத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறினார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 2வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து வெற்றி பெற்ற எம்பி கதிர் ஆனந்த் நேற்று குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு வந்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், நகராட்சி தலைவர் எஸ்.சவுந்தரராஜன், ஒன்றிய செயலாளர் கல்லூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றியத்தில் தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருந்தாலும், ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆதரவளிக்கிறார்களா என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வருகிறது. யார் ஆட்சி அமைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்த பின் தான் அடுத்து என்ன என்பது தெரியவரும். சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்கு வருவாரா? என்பது குறித்து எனக்கு தெரியாது. சரத்பவார், சந்திரபாபு நாயுடுடன் பேசினாரா என்பதும் எனக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு