ஒடிசா ரயில் விபத்து வதந்தி பரப்பிய பாஜ ஆதரவு வக்கீல் கைது 4 பிரிவுகளில் வழக்கு

நாகர்கோவில் ஜூன் 9: ஒடிசா ரயில் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய பாஜ ஆதரவு வழக்கறிஞரை தக்கலை போலீசார் கைது செய்தனர். ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்து ஏற்பட்டது. இதில் 288 பேர் உயிரிழந்தனர், 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வைரலாகியது. செந்தில்.சி என்ற பக்கத்தில், ‘ ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து 300க்கும் மேற்பட்டோரை கொன்றது மற்றும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தது என்ற வாசகத்துடன் விபத்து நடந்த பஹானாகா ரயில் நிலையம் மற்றம் ரயில் நிலையத்தில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் இருப்பது போன்ற புகைப்படம்,மத சாயம் பூசப்பட்ட பெயரும் பதிவிடப்பட்டிருந்தது. ஒடிசா ரயில் விபத்துக்கு ஸ்டேஷன் மாஸ்டர் காரணம், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதில் இருந்து ஸ்டேஷன் மாஸ்டர்தலைமறைவாகிவிட்டார் என்றும் அவர் மற்றொரு பதிவில் கூறியிருந்தார்.

இந்த பதிவு சிறிது நேரத்தில் வைரலாகி வந்தது. இது தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துகளை பகிர்ந்தனர். இதற்கிடையே இந்த பதிவை பதிவிட்டது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பருத்திவிளையை சேர்ந்த பாஜ ஆதரவாளரான வழக்கறிஞர் செந்தில் குமார் என்பது தெரியவந்தது. செந்தில்குமார் முன்னாள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் 1995ல் இருந்து பாஜவில் இருப்பதாகவும் கூறியுள்ளார். பாஜவின் சட்டப்பிரிவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். செந்தில்குமார் டுவிட்டரில் பகிர்ந்திருந்த ஸ்டேஷன் மாஸ்டர் படம் 2004ம் ஆண்டு எடுக்கப்பட்டது ஆகும். மேலும் விபத்து நடந்த நிலையத்தில் அன்று பணியில் இருந்த உதவி ஸ்டேஷன் மாஸ்டர் எஸ்.பி.மொகந்தி ஆவார்.

இந்தநிலையில் மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பி பதிவு வெளியிட்டதாக செந்தில்குமார் மீது திமுகவை சேர்ந்த தினேஷ்குமார் தக்கலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் தக்கலை போலீசார் செந்தில்குமார் மீது கலவரத்தை செய்ய தூண்டுதல், மதம், இனம், ஜாதி அல்லது சமூக அடிப்படையில் எழுதி வெறுப்புணர்வை தூண்டுதல் என்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். முன்னதாக செந்தில்குமார் நேற்று இரவில் தனது பதிவை ஸ்கிரீன் ஷாட் செய்து ‘நான் போட்ட இந்த பதிவு தவறான பதிவு. யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை