ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணையில் இருந்து 1.05 லட்சம் கனஅடி நீர் திறப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 1.15லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் உபரிநீர் திறப்பு மற்றும் காவிரியின் உபநதிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 65ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து மதியம் 88ஆயிரம் கனஅடியாகவும் மாலையில் ஒரு லட்சத்து 8ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 15ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அங்குள்ள மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை 75,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நண்பகல் 85,000 கனஅடியாகவும், மாலை 4 மணிக்க 1,05,000 கனஅடியாகவும் அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து அதேஅளவில் நீடிக்கிறது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக 21,500 கனஅடி வீதமும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 83,500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ேமலும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் அணையில் இருகரைகளிலும் நீர்வளத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேட்டூர் அணையின் இடதுகரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் பொறியாளர் தலைமையில் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். காவிரி கரையோர மக்களும் பாதுகாப்புடன் இருக்கும்படி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. …

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு