ஒகேனக்கல்லில் கரைபுரண்டு பாயும் வெள்ளம்; மேட்டூர் அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடி நீர்திறப்பு.! 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பிய நிலையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில எல்லை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை விநாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றிரவு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்து செல்கிறது. ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 88 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 1 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து 1.20 லட்சம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணைக்கு வரும் நீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. சுரங்க மின் நிலையம் மற்றும் அணைமின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 23,000 கனஅடியும், உபரி நீர் போக்கியான 16 கண்மதகுகள் வழியாக 97,000 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடகா மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வர வாய்ப்புள்ளது. எனவே, சேலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். …

Related posts

செயல்படாத சிக்னல்களால் மாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் கடையின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் அதிரடி

செடி, கொடிகள், மரக்கன்றுகள் முளைத்துள்ளதால் வாயலூர் பாலாற்று உயர் மட்ட பாலத்திற்கு ஆபத்து..? சாலையில் கிடக்கும் மண் குவியலை அகற்ற கோரிக்கை