ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறிய இந்தியா: தமிழுக்கும், தமிழர்க்கும் மத்திய அரசு செய்த துரோகத்தின் உச்சகட்டம்..! கமல்ஹாசன் ஆவேசம்

சென்னை: போர்க்குற்ற தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் இந்திய அரசு நழுவியிருப்பது, தமிழுக்கும் தமிழர்க்கும் மத்திய அரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை இறுதி யுத்தத்தில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வலியுறுத்தி ஐநாவில் மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியது. இலங்கைக்கு எதிரான இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. 47 உறுப்பு நாடுகளில் 22 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 11 நாடுகள் எதிராகவும் வாக்கு செலுத்தின. இதன் பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களும் தோல்வி அடைந்த நிலையில் தற்போது தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. இலங்கைக்கு எதிரான இந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருப்பது, தமிழர்களுக்கும், தமிழர் உணர்வுகளுக்கும் பாஜக அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதகச் செயல் என ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். மேலும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தில் ’இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள்’ குறித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு எதிராக வாக்களிக்காமல் நழுவி இருக்கிறது இந்திய அரசு. தமிழுக்கும் தமிழர்க்கும் மத்தியஅரசு இதுவரை செய்து வந்த துரோகத்தின் உச்சகட்டம் இது என அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை