ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத தரமற்ற மின் சாதனங்கள் விற்றால் கடும் நடவடிக்கை

திருவாரூர், ஜூலை 5: திருவாரூர் மாவட்டத்தில் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத மற்றும் தரமற்ற மின் சாதனங்களை தயாரித்து மற்றும் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
இந்திய அரசு மின் சாதனங்கள் தரக்கட்டுபாட்டு ஆணை 2003ன்படி மத்திய அரசின் தரச்சான்று இல்லாமல் தயாரிக்கப்படும், விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த மின்சாதன பொருட்களை பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதால் அம்மாதிரியான தயாரிக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையாக ஆய்வு மற்றும் கைபற்றுகை செய்து வழக்கு பதிவு செய்திட மாவட்ட தொழில் மைய பொதுமேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வீட்டு உபயோகமின் சாதனங்களான வாஷிங் மிஷன், மின்சார சமையல் பாத்திரம், நீர் சூடேற்றும் பாத்திரம், தேனீர் தயாரிப்பு பாத்திரம், அரவை இயந்திரம், முடி உலர்த்தும் இயந்திரம் போன்றவைகளை இந்திய அரசு வீட்டு உபயோக மின்சாதனங்கள் தரகட்டுபாட்டு ஆணை 1981ன்படி தரக்கட்டுபாட்டு சான்று உள்ளவைகளையே தயாரிக்க, விற்பனை செய்ய வேண்டுமெனவும், மத்திய அரசின் தரச்சான்று இல்லாமல் உற்பத்தி செய்யவோ, இருப்பில் வைத்திருப்பதோ விற்பனைசெய்யவோ, கூடாது.

தரமற்ற மின்சார வீட்டு உபயோக சாதனங்களை பயன்படுத்தும் போது மின் விபத்து காரணமாக பேரிழப்புகள் ஏற்படுவதால் அவ்வாறு தரக்கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாமல் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டதொழில் மைய பொது மேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணைகளின்படி திருவாருர் மாவட்டம் முமுவதும் உள்ள ஐ.எஸ்.ஐ தரச் சான்றில்லாத வாட்டர் ஷீட்டர், மின் சலவைப்பெட்டி, மின்சார அடுப்பு, மின் சுவிட்ச், எலக்ட்ரிக் ரேடியேட்டர்ஸ், சர்க்யூட் பிரேக்கர்ஸ் பல்புகள், பிவிசி கேபிள்கள் மற்றும் மின் உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக மின் சாதனங்கள் தயாரிப்பதையும் அல்லது விற்பனை செய்வதையும் கண்டிப்பாக தவிர்க்குமாறு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தரம் குறைந்தபொருட்கள் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருவாருர் மாவட்டம் முமுவதும் உள்ளமின் சாதனங்கள் மற்றும் வீட்டுஉபயோகமின் சாதனபொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்பு இன்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். ஆய்வின்போது உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களிடமிருந்து மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பவும் நிர்ணயிக்கப்பட்ட தரஆய்வின்படி இல்லாதமின் சாதனபொருட்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் வீட்டு உபயோகமின் சாதன பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர பதிவுகள் மேற்கொள்ள மாவட்டதொழில் மையபொதுமேலாளரை அணுக வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட தொழில் மையம் பொதுமேலாளரை 04366 290518, 89255 34012 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். எனவே, இது தொடர்பான உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் இந்தியதரக் கட்டுபாட்டு முத்திரை பெற்ற பொருட்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை