ஐயம் தெளிவோம்!

?விதிவழியே வாழ்க்கை அமைகிறது என்றால் பூஜைகளும், பரிகாரங்களும் எதற்கு? விதியை வெல்ல இயலவில்லை என்றால் அவற்றால் என்ன பயன்.நாம்  விதிவழியே அனுபவிக்க வேண்டியவற்றை பிராரப்த கர்மாவை ஒட்டியே, இறைவன் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கிறான். இது அமைவது நமது முந்தைய பிறவியில் செய்த நன்மை, தீமைகளைப் பொறுத்தது. இதை மீறி எதுவும் நடப்பதில்லை. ஏனென்றால், இது ஒரு திட்டமிட்ட கணக்கு. இந்த பேலன்ஸ் ஷீட்டை மாற்றினால், கணக்குச் சரிப்பட்டுவராது! எது நடக்க முடியாதோ, அதற்கு நாம் பிரயாசை எடுத்துக் கொண்டாலும் நடைபெறாது. எது நடக்க வேண்டுமோ, அது நாம் எவ்வளவு தூரம் தடுத்தாலும் நடந்தே தீரும். ஒரு இயந்திரத்தை நிறுவும்போதே அது என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அமைத்துவிடுகிறோம். அதை மாற்றிச் செய்ய இயந்திரத்துக்கு அதிகாரம் இல்லை. அதைப்போல, நாம் பூமியில் பிறக்கும் போதே, நம்மால் என்னென்ன நடக்க வேண்டும் என்பதை ஆண்டவன் தீர்மானித்து விடுகிறான். அதிலிருந்து நாம் மாறுபட முடியாது. மேலும், நமக்கு எது பிராரப்தம், எது முன் வினை என்பதையெல்லாம் பகுத்து அறியும் திறனை அறிவது என்பது அவ்வளவு எளிதல்ல. அதனால், வாழ்வை அதன் போக்கை அப்படியே ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டும். வாழ்வை அவதானிக்கத் தெரிந்து விட்டால் நம்மை மீறிய சக்தி ஒன்று எல்லா காரியங்களையும் நடத்திக் கொண்டுபோவது புரியும். இதற்கு நாம் நம்மை நாமே கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம் வெற்றிகள் நம்மால் ஏற்படுகின்றன என்று சில சமயம் தோன்றும். ஆனால், எல்லாவற்றிலும் நம்மால் ஈடுபட்டு, முயற்சி செய்தும் வெற்றி பெற இயலவில்லையே என்பதையும் கவனிக்க வேண்டும். சில சமயங்களில் தோல்விகளும் கூட நமக்கு நன்மை செய்வதாகத்தான் அமையும். எனவே, வாழ்வின் விசித்திர போக்குகளை ஆழ்ந்து கவனிப்பதன் மூலமாக அமைதியான வாழ்வை வாழலாம். அந்த அமைதிக்குத்தான் பூஜை, புனஸ்காரம், தியானம், யோகம், ஞானம் என்றெல்லாம் வைத்திருக்கிறார்கள். உங்கள் வாழ்வில் துக்கம் வந்தாலும், அது உங்களை பெரிதாக பாதிக்காதபடிக்கு அல்லது அனுபவப் பூர்வமாக எடுத்துக்கொள்கின்ற பக்குவத்தை பூஜைகள், தியானங்கள் தருகின்றன. எனவே, தீயவற்றில் ஈடுபடாமல், அடுத்த பிறவிக்கும் சுமைகளைச் சேர்த்துக் கொள்ளாமல், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வாழ்வின் விளைவுகளில் சுகமும் துக்கமும் அப்படிப்பட்டவனைப் பாதிப்பதும் இல்லை.- திருவருணை கிருஷ்ணா…

Related posts

குறைகளற்ற நிறைவான வாழ்வருளும் தேவி

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள்

கருவூர்த் தேவர்