Saturday, July 6, 2024
Home » ஐயப்பனை விரும்பிய புஷ்கலா

ஐயப்பனை விரும்பிய புஷ்கலா

by kannappan
Published: Last Updated on

நன்றி குங்குமம் ஆன்மிகம் தெய்வத் திருமணங்கள் திருக்கோயில்களில் நடைபெறும். அது மனிதர்களிடையே நடைபெறும் திருமண வைபவத்தைப் போலவே பல வைதீகச் சடங்குகளுடன் நடைபெறும். இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது, பல கேள்விகள் எழும். தெய்வங்களுக்கு மனிதர்களைப்போல மாலை மாற்றி, மாங்கல்யம் சூட்டி, லாஜ ஹோமம் நடத்தி, கங்கண தாரணம், முளைப்பாலிகை, கன்யாதானம் என எந்த நிகழ்வையும் தவறாமல் செய்ய வேண்டுமா என்று தோன்றும்.தெய்வத் திருமணங்களின் பொருள்தெய்வத் திருமணங்கள் ஒரு குறியீடுதான். அது உண்மையில் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தைத்தான் குறிக்கின்றது. அப்படி தத்துவார்த்தமாகச் சொன்னால் புரியாது என்பதற்காகத்தான் திருமண வைபவமாக நடத்திக் காட்டுகிறார்கள். தெய்வங்களுக்கு உறவு முறை சொல்வது, நைஷ்டிக பிரம்மச்சாரி என்று சொல்வது, பல தேவிமார்களைத் திருமணம் செய்து வைப்பது எல்லாமே ஒருவித ஆன்மிகத் தத்துவக் குறியீடுகள்தான்.இதில் காதலும் உண்டு.  முருகன் வள்ளியைக் காதலித்தான். ஆண்டாள் கண்ணனைக் காதலித்தாள். ‘‘கண்ணனுக்கே ஆமது காமம்’’ என்றும் ‘‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’’ என்றும் உறுதியாகக் கூறினாள் ஆண்டாள். வடக்கே மீராவும் அப்படித்தான். ஜீவாத்மா சொரூபத்தை பெண்ணாக்கி, பரமாத்ம ஸ்வரூபத்தை ஆணாக்கி, ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியத்தை திருமணம் என்றும் சொன்னார்கள்.வைணவ மரபில் இன்னும் ஒரு படி மேலே பொய் மரணத்தைக் கூட திருமணத்தோடு இணைத்து ஆத்ம விவாகம் என்று அழைப்பதுண்டு. அதாவது இந்த ஜீவாத்மா பரமாத்மா விடம் ஐக்கியம் ஆகிறது என்று அதற்கு ஒரு மதிப்பு தருவது உண்டு. ஐயப்பன் விஷயத்திலும் அப்படித்தான். ஐயப்பன் நைஷ்டிக பிரமச்சாரி என்பார்கள். கன்னிப்பெண்களுக்கு சபரிமலையில் தரிசனம் இல்லை. தன்னை மணம் செய்ய விரும்பிய மாளிகைபுரத்து அம்மனை தன் பக்கத்திலேயே காத்திருக்கச் சொன்னவன் ஐயப்பன். என்றைக்கு ஒரு கன்னி சாமியும் (புது பக்தனும்) தன்னைத் தேடி வரவில்லையோ, அன்றைக்கு உன்னை மணந்து கொள்கிறேன். அதுவரை காத்திரு என்று சொல்லியதால், ஐயப்ப சுவாமி அவதாரம் நிகழ்ந்த காலத்திலிருந்து மாளிகைபுரத்து அம்மன் காத்துக்கொண்டிருக்கிறாள். அப்படியானால் ஐயப்ப சுவாமிக்கு திருமணம் இல்லையா என்றால் சபரிமலையில் தான் இல்லை. சில இடங்களில் ஐயப்ப சுவாமிக்கு திருமண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சாஸ்தாவுக்கு நான்கு ஆலயங்கள் பிரதானமானவை. சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், குளத்துப் புழையில் பாலகனாகக் காட்சி அளிக்கின்றான். ஆரியங்காவில் புஷ்கலா தேவியுடன் இளைஞனாகக் காட்சி தந்து கொண்டிருக்கிறான். அச்சன்கோயிலில் பூரணை புஷ்கலா தேவியருடன் காட்சி தருகின்றான். பூரணை, புஷ்கலா தேவிபூரணை புஷ்கலா தேவி குறித்து கூட பல செய்திகள் உண்டு. சௌகந்தி ராஜன் மகள் பூர்ணா, அம்பரராஜனின் மகள் பஷ்கலா என்று ஒரு நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு நூலில் (சில்ப ரத்தினம் என்ற நூல்) அவர் மேக வர்ணர் என்றும் பிரம்மை என்ற மனைவி இருப்பதாகவும் சத்யன் என்ற குழந்தையும் இருப்பதாகவும் கூறுகிறது.இன்னும் சில நூல்களில் அவருடைய நிறம் கறுப்பு நிறம் என்றும், மதனா வர்ணினீ என்ற மனைவி இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. முன்னொரு காலத்தில் சத்ய பூர்ணர் என்றொரு மகரிஷி வசித்துவந்தார். அவருக்கு பூரணை, புஷ்கலை என்ற இரு மகள்கள். அவர்கள் ஹரி புத்திரனை மணக்கவேண்டி கடுமையாக விரதம் இருந்தார்கள். இறைவன் அடுத்த பிறவியில் எண்ணம் ஈடேறும் என்று கூறி மறைந்தார். அவர்களில் ஒருத்தி நேபாள மன்னனுடைய மகளாக பிறந்து தர்ம சாஸ்தாவை மணம் முடிக்கிறாள். மற்றொருத்தி இப்பொழுது வஞ்சி மாநகரத்தை ஆண்ட பிஞ்சகன் என்னும் அரசனுக்கு மகளாக பூரணை என்ற திருநாமத்தில் வளர்ந்துவந்தாள்.  பூரணை மற்றும் பரிவாரங்களுடன் வேட்டைக்கு சென்ற மன்னன் தன்னுடன் வந்தவர்களை பிரிந்தான். திடீரென அங்கு ஒரு சுடுகாட்டில் பூதங்களும், பேய்களும் களியாட்டம் ஆடிக்கொண்டிருந்ததைக் கண்ட மன்னன் அச்சமடைந்தான்.  தர்ம சாஸ்தாவை நினைத்து பிரார்த்தனை செய்தான். தர்ம சாஸ்தா அப்போது தோன்றி பூதங்களை விரட்டி, மன்னனை பத்திரமாக அரண்மனைக்குக் கொண்டு சென்று விட்டுவிடுகிறார். மன்னன் திருமண வயதில் இருக்கும் தன்மகள் பூரணையை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று சாஸ்தாவிடம் வேண்டுகிறார். தர்மசாஸ்தா அவளின் பிறப்பு ரகசியத்தை உணர்த்தி, பூரணையை மணம் செய்து கொள்கிறார்.  ஆரியங்காவு திருமண வைபவம்ஆரியங்காவு ஐயப்பன் கோவில், ஐயப்பனின் முக்கியமான கோவில்களுள் ஒன்று. இக்கோவில் தமிழக மாநிலத்தில், தென்காசி மாவட்டத்திலுள்ள ஆரியங்காவு எனும் சிற்றூரில் அமைந்துள்ளது. கொல்லத்திலிருந்து சுமார் 70 கி.மீ. தொலைவிலும் புனலூரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருவனந்த புரம்-தென்காசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ. தூரத்தில் உள்ளது. சபரி மலையில் பிரம்மச்சாரியாக உள்ள ஐயப்பன் இக்கோவிலில் புஷ்கலை என்னும் பெண்ணைத் திருமணம் செய்தவராகக் காட்சி தருகிறார். தனுர் மாதத்தில் (மார்கழி) ஐயப்பன் – புஷ்கலா தேவி கல்யாண உற்சவம் நடைபெறும். புஷ்கலா தேவி கல்யாண உற்சவக் கதையை உற்றுநோக்கும்போது ஆண்டாள் நாச்சியார் நம் நினைவுக்கு வருவார். ஆண்டாளைப் போலவே ஐயப்பனுக்கு புஷ்பங்களைப் பறித்து, மாலை சூட்டி தந்து மணாளனாக வரித்தவள் கதைதான் இந்தக்  கதை.சென்ற சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் கதையின் நிகழ்வுகளை இன்றைக்கும் நினைவூட்டும் வண்ணம் ஒவ்வொரு வருடமும் ஆரியங்காவு என்ற இடத்தில் ஐயப்பனுக்கு விவாக உற்சவம் நடைபெறுவது உண்டு. சௌராஷ்டிரப் பெண் புஷ்கலாஇந்தியாவின் மேற்குக் கடற்கரையில் குஜராத் தேசத்திற்கு மேற்கே சௌராஷ்ட்ரா தேசம் உண்டு. அங்கே வாழ்ந்த மக்கள் பக்தியிலும், வேதத்திலும், நெசவு முதலிய கைத்தொழில்களிலும் நிபுணர்களாக இருந்தார்கள். அவர்களை சௌராஷ்டிரர்கள் என்றும் சௌராஷ்ட்ரா விப்ர குலத்தவர்கள் என்றும் சொல்கிறார்கள்.அந்நியப் படையெடுப்புகளால் துவாரகை, சோமநாதபுரம் முதலிய புண்ணிய தேசங்கள் தாக்கப்பட்டபோது அவர்கள் வாழ்வு தேடி இடம்பெயர்ந்தனர். மகாராஷ்டிரா, கர்நாடகத்தில் மைசூர் முதலிய தேசங்களைக் கடந்து விஜயநகரத்தில் வாழ்ந்து, தமிழகத்தின் திருவல்லிக்கேணி, கும்பகோணம், தஞ்சாவூர், ராமநாத புரம், பரமக்குடி, இராமேஸ்வரம் என பல இடங்களிலும் குடியேறினர். திருமலை நாயக்க மன்னரின் காலத்தில் அவர்கள் மதுரையில் குடியேறினார்கள்.திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் இவர்களின் பட்டுத்துணி தயாரிப்பில் ஆர்வம்கொண்டான். திருவிதாங்கூர் மன்னருக்கு பலவிதமான வண்ணப் பட்டாடைகள் செய்துகொண்டு போய் கொடுத்து சன்மானம் பெற்று திரும்புகிறவர்கள் உண்டு. அதில் ஒரு சௌராஷ்டிர நெசவாளியின் மகள் புஷ்கலா தேவி.யானையிடம் இருந்து காத்த இளைஞன்ஒருமுறை திருவிதாங்கூர் மன்னருக்கு ஆடைகளை நெசவு செய்து கொண்டு போய்க் கொடுத்து வருவதற்காக தன்னுடைய மகளுடன் புறப்பட்டார்.அவர் கேரளாவுக்கு செல்ல வேண்டும். வழியில் ஆரியங்காவு சாஸ்தா கோயில் உண்டு. அந்த கோயில் மேல்சாந்தி இவருக்குப் பழக்கம். இதற்குமேல் காடு விலங்குகள் முதலிய தொல்லைகள் இருப்பதால் பாதுகாப்பாக அந்த கோவிலின் மேல்சாந்தியின் (அர்ச்சகர்) இல்லத்தில் தன்னுடைய மகளை விட்டுவிட்டு, “வருவதற்கு சில காலம் ஆகும், வந்து அழைத்துச் செல்கிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார். புஷ்கலா அர்ச்சகர் மூலம் ஐயப்பனின் பெருமைகளை அறிந்தாள். அங்கிருந்த ஐயப்பனுக்குத் தினசரி மாலைசூட்டித் தரும் தொண்டுபுரிந்து வந்தாள். தினமும் நந்தவனத்திற்குச் சென்று, வண்ண வண்ண மலர்களை பறித்து வந்து, அழகான மாலை சூட்டித் தந்துகொண்டிருந்தாள்.பூஜைநேரத்தில் அந்த மாலை சூடிய ஐயப்பனின் அழகைக் கண்டு ஆனந்தம் அடைந்தாள். அவள் உள்ளத்தில் ஐயப்பனின் மீது ஆர்வம் பிறந்தது. ஐயப்பனும் அவள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு நாடகம் நடத்தினார்.மன்னருக்கு பட்டாடைகள் தந்துவிட்டு திரும்பியபோது காட்டில் ஒரு மத யானை அவரை வழிமறித்து துரத்தியது. அதிலிருந்து தப்பிக்க அவர் ஓடினார். “ஐயப்பா…என்னைக் காப்பாற்று” என்று கதறுகிறார். அப்போது காட்டில் வலிமையான தோள்வலி படைத்த இளைஞனொருவன் அந்த மத யானையை அடக்கி நெசவாளியைக்   காப்பாற்றினார்.இதைக்கண்டு மகிழ்ச்சியுற்ற நெசவாளி, ‘‘என் உயிரைக் காப்பாற்றினாய்.  மிகவும் நன்றி அப்பா. மன்னர் தந்த சன்மானம் என்னிடத்திலே உண்டு. உனக்கு நான் பரிசுகள் தர விரும்புகின்றேன்’’ என்றார். தன்னிடம் இருந்த உயர்ந்த பட்டாடை ஒன்றினை பரிசாகக் கொடுக்கிறான். மனம் மகிழ்ந்த வாலிபன், உடனே அதை அணிந்து அழகே உருவாகக் காட்சிகொடுத்து சிரித்துக்கொண்டு இருக்கிறான்.‘‘ஆஹா…மாப்பிளை போல இருக்கிறாய் அப்பா…வேறு என்ன வேண்டும் உனக்கு?”என்று கேட்கிறார். உடனே ‘‘எதைக் கேட்டாலும் நீங்கள் தருவீர்களா?’’ என்று அந்த இளைஞன் கேட்க, புஷ்கலாவின் தந்தை சொன்னார். ‘‘கட்டாயமாகத் தருகிறேன் அப்பா.  என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு நான் எதை கேட்டாலும் தருகிறேன்’’ என்று சொன்னவுடன், ‘‘உங்களுடைய மகளை எனக்கு திருமணம் செய்து கொடுப்பீர் களா?’’ என்று கேட்டவுடன் ஒரு கணநேரம் அந்த நெசவாளிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டுமே… அதனால் ‘‘அவர் மணம் செய்து கொடுக்கிறேன்’’ என்று உறுதி கூறினார்.  “சரி. இப்போது நான் செல்கிறேன். என்னை ஆரியங்காவு கோவிலில் சந்தியுங்கள்” என்று சொல்லிவிட்டு காட்டுக்குள் சென்று மறைந்தான் இளைஞன்.பட்டாடையில் ஜொலித்த ஐயப்பன்ஆரியங்காவு கோவிலை அடைகிறார். தான் ஒரு இளைஞனால் காப்பற்றப்பட்ட சேதியை மேல் சாந்தியிடமும் மகளிடமும் சொல்கிறார். ஒரு பட்டாடையை அந்த இளைஞனுக்குக் கொடுத்ததையும் சொல்லி, புஷ்கலையை அவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதாக தான் உறுதி சொல்லியதையும் கூறுகிறார்.புஷ்கலா ‘‘நான் மணந்துகொண்டால் ஐயப்பனைத் தான் மணந்து கொள்வேன்’’ என்று சொல்கிறாள். இந்த குழப்பத்தோடு காலையில் அவர்கள் சந்நதக்குச் சென்று கதவைத் திறந்து சாஸ்தாவை தரிசனம் செய்கிறார்கள். கோவிலை திறந்து சந்நதியைப் பார்த்தார்கள். காட்டில் நெசவாளி கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் காணப்பட்டது. அதே மாப்பிள்ளை கோலம். அப்பொழுது ஒரு அசரீரி புஷ்கலை திருமண ஏற்பாட்டைச் செய்யும்படி உத்தரவிடுகிறது. இந்த செய்தியை மன்னருக்குச் சொல்ல அவரும் சம்மதித்து நாள் குறிக்கிறார். சௌராஷ்டிர நெசவாளி, இந்தச் செய்தியை மதுரையிலுள்ள தம்முடைய உறவினர்களுக்குச் சொல்லி திருமண நிகழ்வுக்கு அழைக்கிறார். அவர்களும் சீரோடு இந்த இடத்திற்கு வருகின்றார்கள். குறிப்பிட்ட நாளில் திருமண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஐயப்பன் நேராக வந்து புஷ்கலையின் கரம் பிடித்து திருமணம் செய்துகொள்கிறார்.திருமண வைபவமும், சம்பந்தி விருந்தும்இன்றைக்கும் இந்தத் திருமண வைபவம் ஆரியங்காவில் வெகு விமர்சையாக நடக்கிறது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் இந்த கல்யாண வைபவத்துக்கு நாள் குறித்து சம்பந்தி வீட்டார் அழைப்பாக மதுரை சௌராஷ்ட்ரர்களுக்கு அனுப்புகின்றனர். ‘‘தீர்த்தம்’’ என்ற வகையில் சாஸ்தா குடி கொண்டுள்ள குளத்துப்புழை, அச்சன்கோவில், பம்பை ஆகிய இடங்களில் புனிதமான நதிகள் இருப்பது போல ஆரியன்காவு திருக்கோவிலின் சந்நதியிலும் ‘‘கருப்பா நதி’’ சல சலத்து ஓடிக்கொண்டிருக்கிறது. சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.சாஸ்தா கோவில்களில் இங்கு மட்டு மே திருக்கல்யாண தினத்தன்று ‘‘சப்பர புறப்பாடு’’ நடைபெற்று மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருக்கோயிலுக்கு உள்ளே மலையாள தாந்தீரிக முறைப்படியும், வெளிப்பிராகாரத்தில் நடைபெறும் திருக்கல்யாணம், ‘‘பாண்டியன் முடிப்பு’’ நிச்சயதார்த்த வைபவம், சப்பர புறப்பாடு ஆகியவை தமிழ் நாட்டு ஆச்சார முறைப்படியும் நடைபெறுகிறது. மதுரையைச் சேர்ந்த சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்த சிலர் ‘‘சம்பந்தி’’ முறையில் இந்த திருக்கல்யாண வைபவத்தில் மணமகள் ஸ்ரீபுஷ்கலா தேவி சார்பில் குலப் பெண்ணான புஷ்கலைக்கு சீதனம் எடுத்து சென்று கலந்து கொள்கிறார்கள். தேவஸம் போர்டரால் மூன்று நாள் ‘‘சம்பந்தி விருந்தும்’’ அவர்களுக்கு வழங்கப்படுகிறது.தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

You may also like

Leave a Comment

five + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi