ஐபிஎஸ் அதிகாரி என கூறி ரூ. 6 லட்சம் மோசடி: சென்னை தொழிலதிபரை ஏமாற்றிய 2 பேருக்கு வலை

கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்தில் உணவு விடுதி நடத்த உரிமம் பெற்று தருவதாக ஐபிஎஸ் அதிகாரி என கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்த 2 பேரை தேடி வருகின்றனர்.சென்னை சவுகார்பேட்டை நன்னியன் தெருவை சேர்ந்தவர் முகேஷ் குமார் புரோகித் (48). தொழிலதிபர். இவர் சென்னை மற்றும் கோவையில் உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கு கோவையை சேர்ந்த ராஜ்குரு (39) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜ்குரு, தன்னை ஐபிஎஸ் அதிகாரி என கூறி போனில் பேசி பழகி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர், ‘முகேஷ் குமார் புரோகித்திடம், தனக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் செல்வாக்கு உள்ளது. அங்குள்ள வளாகத்தில் உங்களுக்கு கபே மற்றும் உணவு விடுதி நடத்த ஏற்பாடு செய்து தருகிறேன்’ என தெரிவித்துள்ளார். உடனே முகேஷ்குமார் புரோகித்தும் அங்கு உணவு விடுதி நடத்த ஆர்வம் காட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, ‘கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வாருங்கள். நாம் அது சம்பந்தமாக பேசி கொள்ளலாம்’ என்று ராஜ்குரு தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 12ம் தேதி முகேஷ் குமார் புரோகித் ஓட்டலில் தங்கியிருந்த ராஜ்குருவை சந்தித்துள்ளார். அப்போது அவர், ‘கலெக்டர் அலுவலகத்தில் உணவு விடுதி அமைக்க அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும், கொஞ்சம் செலவாகும்’ என தெரிவித்துள்ளார். அவர் கேட்டபடி ரூ. 1.5 லட்சம் கொடுத்துள்ளார். மறுநாள் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் சந்தித்து ரூ.1 லட்சம் மற்றும் தன்னிடம் இருந்த ரூ.1.53 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போனையும் கொடுத்துள்ளார். மேலும் ராஜ்குரு மற்றும் அவரது உதவியாளராக கூறிய தர் ஆகியோர் ஓட்டலில் தங்கும் செலவு, உணவு ஆகியவற்றுக்கு என சில ஆயிரங்களை பெற்று கொண்டனர். மொத்தமாக அவரிடம் ரூ. 6 லட்சம் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து ராஜ்குரு சொன்னபடி கலெக்டர் அலுவலகத்தில் உணவு விடுதி நடத்த உரிமம் பெற்று தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனையடுத்து முகேஷ் குமார் புரோகித், ராஜ்குருவை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் மோசடி நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குருவை தேடி வருகின்றனர்….

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு