Monday, September 9, 2024
Home » ஐந்து ஆண்டுகளில் ரூ.27 கோடி சொத்து குவிப்பு மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

ஐந்து ஆண்டுகளில் ரூ.27 கோடி சொத்து குவிப்பு மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

by kannappan

* சென்னை, செங்கை, காஞ்சி உள்பட 7 மாவட்டங்களில் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி* 5 கிலோ தங்க நகைகள், 136 கனரக வாகனங்கள், பல கோடி மதிப்பு சொத்து பத்திரங்கள் சிக்கினசென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக கிடைத்த தகவலின்படி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுகோட்டை, மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள வீடு, அலுவலகம் என 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்க நகைகள் மற்றும் 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள்,  பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில், அமைச்சர்கள் பலர் முறைகேடாக தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, பல இடங்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக, அப்போதைய எதிர்கட்சியான திமுக உரிய ஆவணங்களுடன் ஆளுநரிடம் மனுவாக கொடுத்து, நடவடிக்கை எடுக்கக் கோரியது. சட்டமன்ற தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், முறைகேடாக சம்பாதித்த அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. பல்வேறு சமூக அமைப்புகளும், அதிமுக அமைச்சர்கள் சொத்துக்கள் வாங்கி குவித்தது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தன. பாமகவும், அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தன.தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிமுக மாஜி அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு குறித்து ஏற்கனவே கூறப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையை தொடர்ந்து, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. அதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மேலும் ரொக்க பணம், கிலோ கணக்கில் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், பங்குதாரர்களின் வீடு, அலுவலகங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினராக கடந்த 2011, 2016, 2021 என 3 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். விஜயபாஸ்கர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக  லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது.அதன் அடிப்படையில், நேற்று அதிகாலை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உறவினர்கள், பங்குதாரர்களுக்கு செந்தமான புதுக்கோட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் என 50 இடங்களில் ஒரே நேரத்தில் தனித்தனி குழுக்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், லாட்ஜ்கள் என 30 இடங்களில்  லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் 10 மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.விராலிமலை தொகுதியில் உள்ள இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பையா, குபேந்திரன், பாண்டியன் வீடுகள், விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமாக இலுப்பூர் அடுத்த மேட்டுச்சேரியில் உள்ள மதர்தெரசா கல்லூரி, இலுப்பூர் நாயுடு தெருவில் உள்ள உதயகுமாரின் உதவியாளர் பாண்டி என்பவரின் வீடு, இலுப்பூரில் அமைச்சருக்கு சொந்தமான ராசி விடுதி, திருவேங்கைவாசலில் உள்ள ராசி மெட்டல்ஸ் கல் குவாரியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல் கைக்குறிச்சியில் கல்வி நிறுவனம் நடத்தி வரும் ஆலங்குடி துரை தனசேகரன் வீடு, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளரான அன்பானந்தம் வீடு, புதுக்கோட்டை சார்லஸ் நகரில் முருகேசன் வீடுகளில் சோதனை நடந்தது. மேலும் விஜயபாஸ்கருக்கு சொந்தமான மதர் தெரசா கல்வி அறக்கட்டளைக்கு கீழ் இயங்கி வரும் 14 கல்வி நிறுவனங்களிலும் சோதனை நடந்தது. திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எஸ்ஐஎஸ் அபார்ட்மெண்ட் 8வது மாடியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் வீட்டில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அதேபோல் திருச்சி கிராப்பட்டி காந்தி நகரில் உள்ள இலுப்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், விஜயபாஸ்கரின் உதவியாளரும், பினாமியுமான ராஜமன்னார் (எ) குருபாபு வீட்டிலும் சோதனை நடந்தது. இதேபோல் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது. சென்னையில் விஜயபாஸ்கருக்கு செந்தமான வீடு, உதவியாளர் வீடு, நிறுவனங்கள் என 8 இடங்களில் சோதனை நடத்தது. குறிப்பாக சென்னை கீழ்ப்பாக்கம் ரெம்ஸ் சாலையில் உள்ள விஜயசாந்தி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு, அவரது தந்தை சின்னதம்பிக்கு சொந்தமான நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடம், உதவியாளர் சரவணனுக்கு செந்தமான நந்தனம் விரிவாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, நண்பர் சீனிவாசனுக்கு செந்தமான வளசரவாக்கம் நியூ பெத்தானியா நகர் 5வது தெருவில் உள்ள வீடு, மந்தைவெளிபாக்கம் விரிவாக்கம் ராஜா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் நடத்தி வரும் ஓம் ஸ்ரீ வாரி ஸ்டோன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பெசன்ட் நகர் 4வது மெயின் ரோடில் உள்ள அன்யா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயபாஸ்கருக்கு செந்தமான தி.நகர் பகீரதி அம்மன் தெருவில் உள்ள சொகுசு வீடு என 8 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவி ரம்யா இருந்தார். அப்போது அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் படி விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து 7 மாவட்டங்களில் மொத்தம் 48 இடங்களில் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்தது. அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், பாலாஜி நகர் பகுதியில் உள்ள அஜய்குமார் (45) என்பவர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அலுவலகத்தில் அரசு சார்பில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அஜய்குமார் விருப்ப ஓய்வுபெற்றார். தற்போது அவர், வாலாஜாபாத் பகுதியில் ஒரு தனியார் பள்ளி மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அஜய்குமார், தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அஜய்குமாரின் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி கலைசெல்வன் தலைமையில் 8 பேர் குழு நடத்திய அதிரடி சோதனையில் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி உள்ளனர். அதேபோன்று, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தங்கை தனலட்சுமி, அவரது கணவர் பாலமுருகன் ஆகிய இருவரும் பல் மருத்துவர்கள். இவர்கள் இருவரும் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் பல் மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்கள், புதுப்பட்டினத்தில் உள்ள அரேபியன் கார்டனில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் வீடு, பல் மருத்துவமனையில் நேற்று சோதனை நடந்தது. இந்த சோதனையின்போது செங்கல்பட்டு அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் கட்சியினர் விரைந்து வந்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சோதனையின் போது விஜயபாஸ்கர்  தங்கை வீட்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில்  ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள எஸ்என்வி கார்டனில் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீடிலும் கோவை லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி திவ்யா, இன்ஸ்பெக்டர் பரிமளா தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உறவினர்கள் மற்றும் பினாமிகளான உதவியாளர்கள், நண்பர்கள் வீடு என 7 மாவட்டங்களில் 50 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை முடிவில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ.23,85,700 லட்சம் ரொக்கம், 4,870 கிராம் கொண்டு 4.87 கிலோ தங்க நகைகள், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், வழக்கு தொடர்பான 19 ஹார்ட் டிஸ்குகள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், பல்வேறு வங்கிகளில் உள்ள வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர்கள் விபரங்கள், பினாமிகள் பெயரில் உள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருந்து வருமானத்துக்க அதிகமாக சொத்துக்கள் சேர்த்த புகாரில் சிக்கிய 4வது நபராக, முன்னாள் அமைச்சராக விஜயபாஸ்கர் உள்ளார். இந்த சோதனைக்கு முன்பு புகாரின் பெயரில் கிடைத்த ஆவணங்களின் படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரூ.27.22 கோடி சொத்து குவித்ததாக 6 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஊழலில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருவதால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.* கொரோனா அச்சத்தால் வீட்டிற்குள் செல்ல மறுத்த முன்னாள் அமைச்சர்கள்கீழ்ப்பாக்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது, அதிமுக முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் நேரில் வந்து சோதனை நடைபெறும் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அப்போது விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவுக்கு கொரோனா தொற்று இருந்ததால் முன்னாள் அமைச்சர்கள் யாரும் வீட்டிற்கு செல்லாமல் வீட்டின் வெளியே போடப்பட்ட இருக்கையில் அமர்ந்து தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து சென்றனர்.* விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு கொரோனாகீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கர் மனைவி ரம்யா மற்றும் அவரது மூத்த மகளும் கொரோனா தொற்றால் வீட்டில் உள்ள அறையில் தனிமைப்படுத்தி கொண்டனர். முதலில் இதுதெரியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வீட்டிற்குள் சோதனை நடத்தினர். பிறகு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரம்யா கூறியதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து வீடு முழுவதும் சோதனை நடத்தினர். விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவிடமும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது….

You may also like

Leave a Comment

ten − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi