Thursday, July 4, 2024
Home » ஐசிசி யு19 உலக கோப்பை பைனலில் இங்கிலாந்து: 24 ஆண்டுக்கு பிறகு தகுதி; ஆப்கான் ஏமாற்றம்

ஐசிசி யு19 உலக கோப்பை பைனலில் இங்கிலாந்து: 24 ஆண்டுக்கு பிறகு தகுதி; ஆப்கான் ஏமாற்றம்

by kannappan

நார்த் சவுண்ட்: ஐசிசி யு19 உலக கோப்பை  ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் விளையாட, இங்கிலாந்து அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் இத்தொடரின் முதல் அரையிறுதியில் இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக ஆட்டம்  தாமதமாகத் தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 47 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. தொடக்க வீரர் ஜார்ஜ் தாமஸ் 50 ரன் (69 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஜார்ஜ் பெல் 56* ரன் (67 பந்து, 6 பவுண்டரி), அலெக்ஸ் ஹார்டன் 53* ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். ஆப்கான் பந்துவீச்சில் நவீட்ன் ஸத்ரன், நூர் அகமது தலா 2, கரோடே, இஸருல்லா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, டி/எல் விதிப்படி ஆப்கானிஸ்தான் 47 ஓவரில் 231 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கரோடே, இஷாக் இருவரும் துரத்தலை தொடங்கினர். கரோடே டக் அவுட்டாகி வெளியேற, இஷாக் – அல்லா நூர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இஷாக் 43 ரன் எடுத்து (65 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ரன் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் சுலைமான் சபி டக் அவுட்டானார். அதிரடியாக அரை சதம் அடித்த நூர் 60 ரன் (87 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெளியேற, ஆப்கானிஸ்தான் சரிவை சந்தித்தது. எனினும், அப்துல் ஹாடி – பிலால் அகமது இணை 5வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்க்க, ஆட்டம் ஆப்கான் பக்கம் திரும்பியது. இந்த நிலையில், பிலால் 33 ரன், இஜாஸ் அகமது 4 ரன்னில் ஆட்டமிழக்க, மீண்டும் இங்கிலாந்து கை ஓங்கியது. ஹாடி ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க, நூர் அகமது 20 பந்தில் 25 ரன் விளாசி பரபரப்பை ஏற்படுத்தினார். கடைசி 2 ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட நிலையில், ரெஹான் அகமது வீசிய 46வது ஓவரின் முதல் பந்தில் நூர் விக்கெட்டை பறிகொடுத்தார். 4வது மற்றும் 5வது பந்தில் இஷருல்லா, பிலால் சமி டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே கிடைக்க, 3 விக்கெட் பறிபோனது. இதனால் கடைசி ஓவரில் 18 ரன் தேவைப்பட, ஆப்கான் வீரர்களால் 2 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணி 47 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து 15 ரன் வித்தியாசத்தில் தோற்றது (4 பேர் டக் அவுட்). ஹாடி 37 ரன், நவீத் ஸத்ரன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ரெஹான் அகமது 4, ஆஸ்பின்வால் 2, பிரெஸ்ட், பாய்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இங்கிலாந்து 24 ஆண்டுகளுக்கு பிறகு யு19 உலக கோப்பை பைனலுக்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, 1998ல் பைனலில் விளையாடிய அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது….

You may also like

Leave a Comment

five × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi