ஐசிசி மகளிர் உலக கோப்பை தொடர்ச்சியாக 5வது வெற்றியுடன் ஆஸி. அரையிறுதிக்கு முன்னேறியது: பந்துவீச்சில் சொதப்பியது இந்தியா

ஆக்லாந்து: ஐசிசி மகளிர் உலக கோப்பையில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா, தொடர்ச்சியாக 5வது வெற்றியுடன் கம்பீரமாக அரையிறுதிக்கு முன்னேறியது. ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. முதலில் பந்துவீசியது. இந்திய தொடக்க வீராங்கனைகள் மந்தானா 10,  ஷபாலி 12 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். யாஸ்டிகா – கேப்டன் மிதாலி ஜோடி பொறுப்புடன் விளையாடி 3வது விக்கெட்டுக்கு 130 ரன் சேர்த்தது. யாஸ்டிகா 59 ரன் (83 பந்து, 6 பவுண்டரி), மிதாலி 68 ரன்னில் (96 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினர்.ஒரு முனையில் ஹர்மன்பிரீத்  அதிரடியாக விளையாட… ரிச்சா கோஷ் (8), ஸ்நேஹ் ராணா (0) வந்த வேகத்தில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் ஹர்மன்பிரீத் –  பூஜா வஸ்த்ராகர் வெளுத்துக்கட்ட  இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்தது. பூஜா 34 ரன் (28பந்து) எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட்டானார். ஹர்மன்பிரீத் 57 ரன்னுடன் (47 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஆஸி. தரப்பில்  டார்சி பிரவுன் 4, அலனா கிங் 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஆஸி. அணிக்கு ரேச்சல் – அலிஸா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. அலிஸா 72 ரன் (65 பந்து, 9 பவுண்டரி), ரேச்சல் 43 ரன்னில் வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் மெக் லானிங் அபாரமாக விளையாட ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. எல்லிஸ் 28 ரன்னில் வெளியேறினார். லானிங் 97 ரன் (107 பந்து, 13 பவுண்டரி) விளாசி கடைச ஓவரில் ஆட்டமிழந்தார். எனினும், 3 பந்துகள் மிச்சமிருந்த நிலையில்  பெத் மூனி அடித்த பவுண்டரி மூலம் வெற்றி ஆஸி. வசம் சென்றது. ஆஸி. 49.3 ஒவரில் 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன் குவித்து வென்றது. பெத் 30 ரன், டாஹ்லியா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய தரப்பில் பூஜா 2, ஸ்நேஹ், மேக்னா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா முதல் அணியாக அரையிறுதியை உறுதி செய்துள்ளது. அந்த அணி இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களிலும்  வென்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்தியா 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வியுடன்  4 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளது….

Related posts

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் ஸ்பெயின் அணி

பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்

தென் ஆப்ரிக்காவுடன் மகளிர் டெஸ்ட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி