ஐகோர்ட் அனுமதி அளித்ததின் பேரில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு: ஜெயலலிதா வகித்த பதவியை கைப்பற்றினார்; ஓபிஎஸ் நிலை கேள்விக்குறியானது

சென்னை: எடப்பாடி அணியினர் பொதுக்குழு நடத்த உயர் நீதிமன்றம் நேற்று காலை அனுமதி அளித்தது. இதனால், அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து செய்யப்பட்டு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அதிமுகவில், ஒற்றைத்தலைமை அதுவும், ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பிடித்துள்ளார். இதனால், அதிமுகவில் ஓபிஎஸ் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா மறைந்தாலும் அவரே அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதவி வகித்து வந்தனர். கட்சியில் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும், ஓபிஎஸ் – இபிஎஸ் கையெழுத்திட்ட பிறகுதான் அது நடைமுறைக்கு வந்தது. இந்த நிலையில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டது. மேலும், முதல்வராக எடப்பாடி இருந்தபோது அதிமுக கட்சியில் தனது ஆதரவாளர்களுக்கு பதவி வழங்கி, தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார். இதையடுத்து அதிமுகவை வழிநடத்த ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் குரல் எழுப்பினர். இதற்கு பெரும்பாலான அதிமுக நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் அணியினர் தற்போதுள்ள இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வந்தால், ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று கூறினர். இந்த நிலையில்தான் கடந்த மாதம் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி ஆதரவாளர்கள் அவமானப்படுத்தினர். இதனால் கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் பாதியிலேயே வெளியேறினார். அன்றைய தினம் 23 தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது. ஆனாலும், அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் ஜூலை 11ம் தேதி (நேற்று) காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார். பொதுக்குழு கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது அனுமதி இல்லாமல் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனால் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 11ம் தேதி (நேற்று) காலை 9 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக கூறினார். ஆனாலும், அதிமுக பொதுக்குழுவை நடத்த எடப்பாடி அணியினர் தீர்ப்பு வருவதற்கு முன்னரே சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தனர்.பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க நேற்று காலை 7 மணிக்கே எடப்பாடி பழனிசாமி சென்னை, அடையார் பசுமைவழிச்சாலையில் உள்ள அவரது வீட்டில் இருந்து பிரசார வாகனத்தில் புறப்பட்டார். அவரை வழிநெடுக அதிமுக மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள் மலர்தூவி, ஆட்டம்-பாட்டம், மேளதாளத்துடன் வரவேற்றனர். சுமார் ஒன்றேமுக்கால் மணி நேர பயணத்துக்கு பிறகு காலை 8.45 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் இடத்துக்கு எடப்பாடி சென்றார். அவரை, நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர். அதிமுக பொதுச்செயலாளர் வாழ்க என்ற கோஷமும் எழுப்பினர். முன்னதாக அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் நேற்று காலை 6 மணியில் இருந்தே மண்டபத்துக்கு வர தொடங்கினர். மின்னணு அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.அறிவித்தபடி நேற்று காலை 9 மணிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார். அதன்படி, ‘அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை’ என்று தீர்ப்பில் கூறப்பட்டதுடன், ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த இரண்டு உரிமையியல் வழக்குகளையும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பால் அதிமுக பொதுக்குழு நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பொதுக்குழு கூட்டத்துக்கு இந்த தகவல் கிடைத்த பிறகே, எடப்பாடி செயற்குழு கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்குள் சென்றார். அப்போது, எடப்பாடிக்கு மூத்த நிர்வாகிகள் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முதலில் அதிமுக செயற்குழு காலை 9.05 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 16 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதையடுத்து திட்டமிட்டபடி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் காலை 9.40 மணிக்கு நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், ‘‘அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக’’ அறிவிக்கப்பட்டது. அப்போது, பொதுக்குழு அரங்கத்தில் இருந்த சுமார் 2,500 பேரும் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுச்செயலாளர் தேர்தலை இன்றைய நாளில் இருந்து 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுபவர்கள், 10 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமை கழக பொறுப்புகளில் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். குறைந்தது 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழியவும் வேண்டும், பொதுச்செயலாளர் பதவி 5 ஆண்டுகள் வரை இருக்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதேபோன்று, அதிமுகவில் இதுவரை நடைமுறையில் இருந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுக்குழு தீர்மானத்தில், ‘‘அதிமுக சட்ட திட்ட விதிமுறைகளில் எங்கெல்லாம் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற சொற்றொடர்கள் வருகின்றதோ அங்கெல்லாம் அவற்றிற்கு பதிலாக ‘கழக பொதுச்செயலாளர்’ என்று மாற்றி அமைக்கப்படுகிறது. எங்கெல்லாம் கழக துணை ஒருங்கிணைப்பாளர் என்ற சொற்றொடர் வருகின்றதோ, அங்கெல்லாம் கழக துணை பொதுச்செயலாளர் என்று மாற்றி அமைக்கப்படுகிறது’’ என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று, ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொருளாளர் பதவியின் அதிகாரமும் குறைக்கப்பட்டு, அதை எடப்பாடி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார். பொருளாளருக்கான அனைத்து அதிகாரங்களும், பொதுச் செயலாளருக்கு உண்டு என்ற தீர்மானமும் இன்று நிறைவேற்றப்பட்டது.இதன்மூலம் அதிமுகவில் அனைத்து பொறுப்புகளையும் எடப்பாடி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. அதேபோன்று, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற பதவியும் நீக்கப்பட்டு, அந்த பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி தனதாக்கி கொண்டுள்ளார். இதன்மூலம், ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்தபோது, தன்னிடம் வைத்திருந்த அனைத்து அதிகாரமும் தற்போது எடப்பாடி கைக்கு சென்றுவிட்டது. இதனால் எடப்பாடி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரம் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.* ஓபிஎஸ் படமே இல்லைஅதிமுக பொதுக்குழுவில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி ஆகிய மூன்று பேர் படங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. கூட்டம் நடைபெறும் இடத்தை சுற்றியும் இவர்களின் படங்களே இருந்தது. ஒரு இடத்தில் கூட ஓபிஎஸ் படம் இடம்பெறவில்லை. பொதுக்குழு மேடையில் எம்ஜிஆர்-ஜெயலலிதா படங்கள் மட்டுமே இருந்தது. இபிஎஸ், ஓபிஎஸ் படம் இல்லை.பொதுக்குழு உறுப்பினர் சுமார் 2,500 பேருக்கு வடை, பாயாசத்துடன் சைவ உணவு பரிமாறப்பட்டது. காலை 9.40 மணிக்கு தொடங்கிய பொதுக்குழு கூட்டம் மதியம் 12.40 மணிக்கு முடிவடைந்தது.* மேடையில் ஓபிஎஸ்சுக்கு இருக்கைஅதிமுக பொதுக்குழு நேற்று நடைபெற்றபோது, மேடையில் பொருளாளர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ்சுக்கு முன் வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது. எடப்பாடி, தமிழ்மகன் உசேன் ஆகியோருக்கு அடுத்த இருக்கை ஓ.பன்னீர்செல்வம், பொருளாளர் என்று எழுதப்பட்டு இருக்கை இருந்தது. ஓபிஎஸ் வராததால் கடைசி வரை அது காலியாகவே இருந்தது. அதேபோன்று ஓபிஎஸ் அணியில் இடம் பெற்றிருந்த வைத்திலிங்கத்துக்கு மேடையின் பின் வரிசையில் இருக்கை போடப்பட்டு இருந்தது. அவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.* வெற்றி மீது வெற்றி வந்து…அதிமுக பொதுக்குழு காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேநேரம், பொதுக்குழு நடத்த அனுமதி கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து காலை 9 மணிக்கு நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் என்று கூறப்பட்டிருந்ததால் அதிக பரபரப்புடன் எடப்பாடி ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் அமர்ந்திருந்தனர். காலை 9.03 மணிக்கு பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து பொதுக்குழு மேடையில் 2 பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது. அதன்படி, ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்… அதை வாங்கி தந்த பெருமையெல்லாம் உன்னை சேரும்’’ என்று எடப்பாடியை வாழ்த்தி பாடல் ேபாடப்பட்டது. அடுத்து, ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே…ஏமாறாதே ஏமாறாதே…’ என்று ஓபிஎஸ்சை கிண்டல் செய்யும் வகையில் பாடல் போடப்பட்டது.* வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்த விஜயபாஸ்கர்அதிமுக பொதுக்குழு நடைபெறும்போது வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்வது வழக்கம். பொருளாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் வரவு-செலவு கணக்கு தாக்கல் செய்வார். ஓபிஎஸ்சிடம் இருந்து பொருளாளர் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்தார்….

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்