ஏழ்மை நிலை வருமா?

உலகிலேயே அதிவேக வளர்ச்சி நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது நமது இந்தியா. 2017ல் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி வளர்ச்சி பட்டியலில் 5ம் இடம் பிடித்தது. அடுத்த இலக்கு நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் வளர்ச்சிக்கு மாற்றப்போவதாக சூளுரைத்தார் பிரதமர் மோடி. ஆனால் இன்று?40 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார சரிவை சந்தித்து இருக்கிறது நமது தேசம். பொருளாதாரம் மைனஸ் 7.3 சதவீதமாக சரிந்து இருக்கிறது. இந்தியா என்றாலே வறுமை, வறட்சி, ஏழ்மை என்ற நிலை மாறி கடந்த 30 ஆண்டுகளாக உலகத்தின் பார்வையில் உயர பறந்த, நமது தேசத்தின் மதிப்பு கடந்த இரண்டு நிதியாண்டுகளாக நிலைகுலைந்து போய் நிற்கிறது. காரணம் நிச்சயமாக கொரோனா மட்டும் இல்லை என்பது பொருளாதார மேதைகளுக்கு மட்டும் புரியும். 1979-80ல் உள்நாட்டு வளர்ச்சி 5.2 சதவீதமாக இருந்தது. அப்போது உலகத்தின் பார்வையில் இந்தியா ஒன்றும் மிகப்பெரிய பொருளாதார நாடு இல்லை. ஆனால் இன்று?உலகத்தின் மாற்றங்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து தொடங்கும் அளவுக்கு, ஒட்டுமொத்த உலக பொருளாதாரத்தின் ஆணிவேராக மாற்றம் பெற்றுள்ளது. உலகின் எந்த மூலையில், எந்த பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அதற்கான மிகப்பெரிய சந்தையாக, அமெரிக்காவையும் மிஞ்சும் அளவுக்கு இந்தியா மாறியிருந்தது. ஏழ்மை நிலை உருமாறி விட்டது. நடுத்தர மக்கள் எண்ணிக்கை அதிகரித்து, மேல் தட்டு மக்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு இருந்தது. ஆனால் இன்று?முதல் அடி ரூபாய் நோட்டு தடையில் வந்தது. அடுத்த அடி திட்டமிடப்படாத, இன்றுவரை முறையாக நிர்ணயிக்க முடியாத ஜிஎஸ்டியால் விழுந்தது. அடுத்து வந்த பேரிடி கொரோனா. ஒட்டுமொத்தமாக உலக பொருளாதாரத்தை சரித்து போட்டு விட்டது. இந்தியா மட்டும் தப்புமா என்ன? ஏற்கனவே  நொறுங்கிப்போய் இருந்த தொழில்துறை முற்றிலும் முடங்கி, சுருண்டு விட்டது. தேசத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றும் விவசாயமும் மெல்ல மெல்ல சாகடிக்கப்பட்டு வருகிறது. அதன்விளைவை இன்று தேசம் அனுபவிக்கிறது. உள்நாட்டு வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை எட்டுவதற்காக இதுவரை மத்தியில் ஆண்ட அரசுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் இந்த 7 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு விட்டது. அதனால்தான் ஒவ்வொரு ஆண்டாக உள்நாட்டு வளர்ச்சி சரிந்து கொண்டே வருகிறது. இதன்பாதிப்பு இனிவரும் 5 ஆண்டுகளில் பலமாக எதிரொலிக்கும்.ஏற்கனவே ஏராளமான மக்கள் வேலை இழந்து விட்டார்கள், ஏராளமான சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மக்களிடம் பணப்புழக்கம் போய் மனப்புழுக்கம் வந்து விட்டது. இதுவரை நடுத்தர மக்கள் மெதுவாக மேல்தட்டு மக்களாக மாற்றப்பட்டு வந்தனர். இனிமேல் அனைத்தும் தலைகீழ். 23 கோடி மக்கள் ஏழையாக மாற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது. 2007-12 வரை உலகம் முழுவதும் பொருளாதார தாக்கத்தில் சரிந்த போது, நமது தேசத்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் தாங்கிப்பிடித்தது போன்ற பொருளாதார மேதைதான் நமது நாட்டிற்கு தேவை. இல்லை என்றால் பெரும் சரிவை தவிர்க்க முடியாது….

Related posts

தங்கம் இனி தங்குமா?

போர் அபாயம்

கடிவாளம் வேண்டும்