ஏலகிரி மலையில் குடிநீர், சாலை வசதியின்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் குண்டும் குழியுமான சாலையால் நோயாளிகளை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம்-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் குடிநீர் மற்றும்  சாலை வசதி இல்லாததால் மருத்துவ சிகிச்சைக்கு டோலி கட்டி தூக்கி செல்லும் அவலநிலையை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை, 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலாத்தலம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மங்கலம் கிராமத்திலிருந்து சுவாமி மலை காட்டுப்பகுதிக்குள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளே நுழைந்து சென்றால், ரவீந்தர் வட்டம் என்ற பகுதியில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இங்குள்ள மலைவாழ் மக்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு குடிநீர் வசதிக்காக 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து அங்குள்ள மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் சில மாதங்களிலேயே ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் விவசாய கிணற்றிலும், டிராக்டர் மூலமும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து மங்கலம் மெயின் ரோடு பகுதிக்கு வருவதற்கு நான்கு கிலோமீட்டர் தொலைவு உள்ளது. அவ்வாறு உள்ள சாலை, குண்டும் குழியுமான மண் சாலையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதற்கும், வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும் போதும் கீழே விழுந்து காயமடைந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்குள்ளவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு அல்லது கர்ப்பிணிகள் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்ல, டோலி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் வசதி மற்றும் சாலை வசதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி