ஏலகிரி மலையில் ஏரிப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம்-வருவாய்த்துறையினர் விசாரணை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் தனிநபர் ஒருவர் ஏரியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் பணி தொடர்ந்ததால் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இது சுற்றுலா தளம் என்பதால் பல்வேறு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரும் இங்கு ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கிப்போட்டு கட்டிடம் அமைத்து வருகின்றனர். இதனால் இங்கு ஒரு சென்ட் இடமானது இலட்சக்கணக்கில் விலை போகிறது. இதைக் கருத்தில் கொண்டு ஏலகிரி மலையில் பல்வேறு பகுதியில் வீட்டு மனை நிலங்கள் என வாங்கிய பல்வேறு தரப்பினர் அருகாமையில் உள்ள ஏரி, ஆற்றுப் புறம்போக்கு, அரசு நிலம் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து தங்களது இடத்துடன் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள புத்தூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் நீர் நிலையான புத்தூர் ஏரி உள்ளது. இங்கு ஏரிப் பகுதியில் சென்னையைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் நீர்நிலை இடத்தை ஆக்கிரமித்து கடந்த ஒரு வருடமாக கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் தனிநபரை அவ்வப்போது தட்டி கேட்டு வந்துள்ளனர். ஆனால் தனிநபர் இந்த இடத்திற்கு உரிய ஆவணம் உள்ளதாக கேட்பவர்களிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனிநபர் ஆக்கிரமித்து கட்டிவரும் கட்டிடத்திற்கு கழிவறை தொட்டி கட்டுவதற்கு ஏரி பகுதியை ஆக்கிரமிப்பு செய்து குழிதோண்டி கட்டிடம் கட்டி உள்ளார். இதையறிந்த அப்பகுதி மக்கள் தனிநபரிடம் விசாரித்துள்ளனர். இதனால் தனிநபருக்கும் ஊர் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இதை அறிந்த ஏலகிரிமலை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரும் வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தனி நபர் தான் கட்டி வரும் கட்டிடத்திற்கு ஆவணங்கள் இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து வருவாய்த்துறையினர் தனி நபரை உரிய ஆவணங்கள் காண்பித்துவிட்டு தங்கள் கட்டிடப் பணியை தொடர வேண்டும் எனவும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமல் எந்தவித பணியும் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஏலகிரி மலையில் இதுபோன்று பல்வேறு தரப்பினர் அரசு புறம்போக்கு, வனத்துறைக்கு சொந்தமான இடம், நீர்நிலை புறம்போக்கு, ஆற்றுப் புறம்போக்கு என பல இடங்களில் அரசு நிலங்களை ஏக்கர் கணக்கில் ஆக்கிரமித்து வனப்பகுதியை குறைத்து வருகின்றனர். எனவே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஏக்கர் கணக்கில் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனே அமைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவையில் மாற்றம்; கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

சென்னை விமான நிலையத்தில் விமானம் பழுதுபார்க்கும் எம்ஆர்ஓ மையம் அமைக்கும் திட்டம் ரத்தா?: தமிழக அரசு 32,300 சதுர அடி நிலம் வழங்கி 2 ஆண்டுகள் ஆகியும் ஆணையம் அலட்சியம்