ஏலகிரி மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்-மலைவாழ் மக்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் வசதியுடன் செயல்பட வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஏலகிரிமலை விளங்கி வருகிறது. இதனால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள மலைவாழ் மக்களின் சுகாதாரத்தை கருத்தில்கொண்டு சுகாதாரத்துறை சார்பில் அத்தனாவூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மலைவாழ் மக்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இங்கு நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாலும், தற்போதுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போதுமானதாக இல்லாமல் இருந்து வருகிறது.மேலும் இங்கு பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நேரங்களில் இருப்பதில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கேட்கும்போது அப்போது பணியில் உள்ளவர்கள் சரியான பதில் கூறுவதில்லையாம். மேலும் மலைவாழ் மக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட நபர்கள் திடீரென விபத்து ஏற்பட்டு ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தால் ஆம்புலன்ஸ் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும், சுகாதார நிலையத்திற்கு  சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் போதுமான மருத்துவ சிகிச்சை வசதிகள் இங்கு இல்லையென கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி விடுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விபத்து மற்றும் நோயால் அவதியுறுபவர்கள் உடனடி முறையான மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே ஏலகிரிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, தனியாக ஒரு ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் செயல்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்