ஏரியில் மூழ்கி வாலிபர் பலி செங்கம் அருகே சோகம் விநாயகர் சிலை கரைத்தபோது

செங்கம், செப்.22: செங்கம் அருகே விநாயகர் சிலையை கரைத்தபோது ஏரியில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, 3ம் நாளான நேற்று முன்தினம் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நடந்தது. மேலும், மேல்புழுதியூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து, பக்கிரிபாளையம் கிராமத்தில் இருந்து விநாயகர் சிலைகளை எடுத்து கொண்டு 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக மேல்புழுதியூர் ஏரிக்கு சென்றனர். இதில், பக்கிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த சீனு மகன் ராஜ்குமார்(19) என்பவரும் கலந்து கொண்டார். பின்னர், மாலை 6 மணியளவில் ஊர்வலம் ஏரிக்கரையை அடைந்ததும் சிலைகளை ஒவ்வொன்றாக நீரில் கரைக்கும் பணி நடந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ராஜ்குமார் ஏரியில் தவறி விழுந்து மூழ்கினார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் ராஜ்குமார் நீரில் மூழ்கிவிட்டார்.

இதுகுறித்து செங்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, போதிய வெளிச்சம் இல்லாத நிலையிலும் சுமார் 2 மணி நேரம் தேடி ராஜ்குமாரை சடலமாக மீட்டனர். இதையடுத்து, போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து செங்கம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்