ஏப்ரல் 15 முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம்

கடலூர், ஏப். 12: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகு சங்கங்கள், மீனவ கூட்டுறவு சங்க தலைவர்கள், மீனவர் கிராம தலைவர்களுக்கு மீன்பிடி தடைகாலம் தொடர்பாக கடலூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் தமிழகத்தின் கிழக்கு மற்றம் மேற்கு கடலோர பகுதியில் மீன்இனப்பெருக்கக் காலத்தை கொண்டு மீன்பிடி விசைப்படகுகள், இழுவலை படகுகள் ஆகியவற்றிற்கு 61 நாட்கள் கடலில் மீன்பிடிப்பதற்கு ஆண்டுதோறும் தடை விதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் 2023ம் ஆண்டிற்கான மீன்பிடி தடைகாலத்தை தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலும் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் இடமளிக்காமல் செயல்படுத்துமாறு அனைத்து மீனவ மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், 2023ம் ஆண்டு மீன்பிடி தடைகாலத்தில் தமிழக கடலோர பகுதிகளிலுள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மீன்பிடி துறைமுகம், தங்குதளத்திலிருந்து கடலில் மீன்பிடிக்க செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் மீன்பிடி தடைகாலத்தில் இயந்திரம் பொருத்தப்பட்ட அனைத்து வகை மீன்பிடி கலன்கள் கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர் மாவட்டங்களிலுள்ள இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் ஆந்திர மாநில கடல்பகுதிக்கு கண்டிப்பாக செல்லக்கூடாது என அனைத்து மீனவர்களுக்கும் தகவல் சென்றடையும் வகையில் அறிவிப்பு வழங்க அனைத்து மீனவ கூட்டுறவு சங்க தலைவர்கள், அனைத்து மீனவ கிராம தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு தடையை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டு அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட மீனவர் சங்கங்களே, கிராமங்களே பொறுப்பேற்க நேரிடும். மீன்பிடி தடைகாலம் அமலுக்கு முன்னர் கடலுக்கு சென்ற மீன்பிடி விசைப்படகுகள் வரும் 14ம் தேதி இரவு 12 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்படுகிறர்கள். அவ்வாறு தவறும் படகுகள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்