எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர் : தமிழிசை, கமல் உள்ளிட்டோர் கலைஞருக்கு பிறந்த நாள் வாழ்த்து!!

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.  தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட  தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், முத்தமிழறிஞர் மரியாதைக்குரிய கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளில் அவரது நினைவை போற்றுவோம்,’ எனத் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை  பிறந்தநாளில் நினைவு கூர்வோம்,’என்று தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கலைஞர் தமிழக அரசியலில் ஒரு விடிவெள்ளி. மாபெரும் சமூக நீதியாளர்.அசைக்க முடியாத தமிழ் பேராண்மைவாதி.எளிய மக்களின் பார்த்தசாரதி.அவர் புகழ் நீடு வாழ்க!!,’ எனத் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘#ஜூன்_03: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள்.  இந்நாளை ‘மாநில சுயாட்சி நாளாக’ நினைவுகூர்வதே அவரது பங்களிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும்.  புது தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. மாநில அரசுகள் அதிகார வலிமைபெற கலைஞர்தான் முதன்முதலில் குரலெழுப்பியவர். இந்திய  அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான உறவுகள்  குறித்து ஆய்வதற்கு ஆணையம் அமைத்தவர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என திமுகவின் கொள்கை முழக்கங்களுள் ஒன்றாக முன்வைத்தவர். இந்நாளில் கலைஞரின்  கனவை  நனவாக்க  உறுதியேற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு